கர்நாடக முழுவதும் எடியூரப்பா சுற்றுப்பயணம்
கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வது உறுதியாகி உள்ளது.
பெங்களூரு:
எடியூரப்பா
கர்நாடக முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதையடுத்து, சமீபகாலமாக அரசியல் நடவடிக்கைகளில் அவர் ஒதுங்கியே இருந்து வந்தார். மாநிலத்தில் பா.ஜனதாவை பலப்படுத்த எடியூரப்பா சுற்றுப்பயணம் செய்ய போவதாக அறிவித்திருந்தார்.
ஆனால் அவர் தனியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள பா.ஜனதா மேலிடம் அனுமதி வழங்கவில்லை. என்றாலும், மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முடிவில் இருந்து எடியூரப்பா பின்வாங்கவில்லை.
சட்டசபை கூட்டம் முடிந்ததும்...
இதுதொடர்பாக கர்நாடக மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் மற்றும் மேலிட தலைவர்களுடன் எடியூரப்பா ஆலோசித்து வருவதாக தெரிகிறது. கட்சி மேலிடம் அனுமதி அளித்ததும் அவர் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார்.
அதாவது கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் வருகிற 13-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டதொடர் முடிந்ததும் எடியூரப்பா மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வது உறுதியாகி உள்ளது.
வாரத்திற்கு 2 மாவட்டங்கள்
முதலில் கல்யாண் கர்நாடகத்திலும், கித்தூரு கர்நாடக பகுதிகளிலும், பின்னர் மத்திய கர்நாடகத்திலும் எடியூரப்பா சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதாவது வாரத்திற்கு 2 மாவட்டங்கள் என அவர் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.
இந்த சுற்றுப்பயணத்தின் போது மந்திரிகள், எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொள்ள உள்ளனர். மாநிலத்தில் தற்போது காலியாக உள்ள ஹனகல் மற்றும் சிந்தகி சட்டசபை தொகுதிகளுக்கு எந்த நேரத்திலும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம்.
பலத்தை நிரூபிக்க தயாராகிறார்
அதுபோல், மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து மற்றும் கிராம பஞ்சாயத்துகளுக்கும் விரைவில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டே எடியூரப்பா மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியை வலப்படுத்துடன், தனது பலத்தையும் நிரூபிக்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக ரூ.1 கோடிக்கு சொகுசு காரை எடியூரப்பா வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story