கொரோனாவால் உயிரிழந்த தந்தையின் நினைவிடத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சிறுமி


கொரோனாவால் உயிரிழந்த தந்தையின் நினைவிடத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சிறுமி
x
தினத்தந்தி 3 Sept 2021 2:37 AM IST (Updated: 3 Sept 2021 2:37 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவால் இறந்த தந்தையின் நினைவிடத்தில் கேக் வெட்டி தனது பிறந்தநாளை சிறுமி கொண்டாடிய நெகிழ்ச்சி சம்பவம் கொப்பல் அருகே நடந்து உள்ளது.

கொப்பல்:

கொரோனாவுக்கு சாவு

  கொப்பல் மாவட்டம் குஷ்டகி டவுனில் வசித்து வந்தவர் மகேஷ். இவரது மகள் ஸ்பந்தனா (வயது 8). இந்த நிலையில் கடந்த ஆண்டு (2020) மே மாதம் மகேஷ் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். பின்னர் அவர் கொப்பல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் மகேஷ் இறந்து விட்டார். பின்னர் அவரது உடல் குஷ்டகி டவுனில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டு இருந்தது.

  இந்த நிலையில் மகேசின் மகள் ஸ்பந்தனாவுக்கு நேற்று 8-வது பிறந்தநாள் ஆகும். ஆனால் தனது பிறந்தநாளை கொண்டாட தந்தை உயிருடன் இல்லை என்று நினைத்து ஸ்பந்தனா மிகவும் வருத்தப்பட்டு உள்ளாள். மேலும் தந்தையின் நினைவில் அவள் தேம்பி, தேம்பி அழுதாள்.

நினைவிடத்தில் வைத்து....

  அப்போது ஸ்பந்தனாவை சமாதானப்படுத்திய குடும்பத்தினர், தந்தையின் நினைவிடத்தில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடலாம் என்று கூறியுள்ளனர். இதற்கு அவள் சம்மதம் தெரிவித்தார். அதன்படி பிறந்தநாளையொட்டி ஸ்பந்தனா புத்தாடை அணிந்து கொண்டாள்.

  பின்னர் கேக்கை எடுத்து கொண்டு தந்தையின் நினைவிடத்திற்கு சென்றாள். பின்னர் தந்தையின் நினைவிடம் அருகே அமர்ந்த ஸ்பந்தனா கல்லறையின் மீது கேக்கை வைத்து வெட்டி பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினாள். இதன் பின்னர் கேக்கை கல்லறையில் அவள் வைத்தாள். இந்த காட்சி குடும்பத்தினரையும், உறவினர்களையும் கண்கலங்கினர். இது காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்தது.

Next Story