உப்பள்ளி-தார்வார், கலபுரகி, பெலகாவி ஆகிய 3 மாநகராட்சிகளுக்கு இன்று ஓட்டுப்பதிவு


உப்பள்ளி-தார்வார், கலபுரகி, பெலகாவி ஆகிய 3 மாநகராட்சிகளுக்கு இன்று ஓட்டுப்பதிவு
x
தினத்தந்தி 3 Sept 2021 2:39 AM IST (Updated: 3 Sept 2021 2:39 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் காலியாக உள்ள உப்பள்ளி-தார்வார், கலபுரகி, பெலகாவி ஆகிய 3 மாநகராட்சிகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பெங்களூரு:

3 மாநகராட்சிகளுக்கு தேர்தல்

  கர்நாடகத்தில் காலியாக இருந்த உப்பள்ளி-தார்வார், கலபுரகி, பெலகாவி ஆகிய 3 மாநகராட்சிகளின் உறுப்பினர்கள் பதவிக்காலம் நிறைவு பெற்றதை தொடர்ந்து செப்டம்பர் 3-ந் தேதி (அதாவது இன்று) தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து வந்தது.

  உப்பள்ளி-தார்வார், கலபுரகி ஆகிய 2 மாநராட்சிகளும் ஆளும் பா.ஜனதா, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அந்த 2 மாநகராட்சியில் மும்முனை போட்டி உள்ளது. பெலகாவியில் ஜனதாதளம் (எஸ்) கட்சி வேட்பாளர்களை நிறுத்தவில்லை. என்றாலும், அங்கு பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் எம்.இ.எஸ். கட்சிகளுக்கு இடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது.

இன்று ஓட்டுப்பதிவு

  இந்த தேர்தலுக்கான பகிரங்க பிரசாரம் நேற்று முன்தினம் ஓய்ந்திருந்தது. உப்பள்ளி-தார்வார் மாநகராட்சியில் உள்ள 82 வார்டுகளுக்கும், கலபுரகி மாநகராட்சியில் 55 வார்டுகளுக்கும், அதுபோல், பெலகாவி மாநகராட்சியில் இருக்கும் 58 வார்டுகளுக்கும் இன்று (வெள்ளிக்கிழமை) தேர்தல் நடக்கிறது. ஒட்டு மொத்தமாக 3 மாநகராட்சிகளிலும் 195 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது.

  பெலகாவி மாநகராட்சியில் 385 வேட்பாளர்களும், உப்பள்ளி-தார்வார் மாநகராட்சியில் 420 வேட்பாளர்களும், கலபுரகி மாநகராட்சியில் 300 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். ஒட்டு மொத்தமாக 3 மாநகராட்சிகளுக்கும் நடைபெறும் தேர்தலில் 1,105 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த 3 மாநகராட்சிகளுக்கும் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது. மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நகரசபை வார்டுகளுக்கும்...

  3 மாநகராட்சிக்கும் தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவலுக்கு மத்தியில் தேர்தல் நடைபெற இருப்பதால் வாக்குச்சாவடிகளில் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஓட்டுப்போட வருகை தரும் வாக்காளர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும், அவர்களது கையில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்று வாக்குச்சாவடியில் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

  இதுபோல், மாநிலம் முழுவதும் நகரசபைகளில்காலியாக உள்ள வார்டுகளுக்கும் இன்று இடைத்தோ்தல் நடைபெறுகிறது. அதன்படி, பீதா் நகரசபையின் 26-வது மற்றும் 32 வார்டுகளுக்கும், சிவமொக்கா நகரசபையின் 29-வது வார்டுக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புரா நகரசபையில் உள்ள 31 வார்டுகளுக்கும், சிக்கமகளூரு மாவட்டம் தரிக்கெரே புறசபையில் உள்ள 23 வார்டுகளுக்கும் இன்று தேர்தல் நடக்கிறது.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

  3 மாநகராட்சிகள் மற்றும் நகரசபை, புறசபைகளுக்கு தேர்தல் நடைபெறுவதையொட்டி, அங்கு முன் எச்சரிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக பெலகாவி மாநகராட்சியில் பல்வேறு வார்டுகளில் பதற்றமான வாக்குச்சாவடிகள் இருப்பதால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று பெலகாவி போலீஸ் கமிஷனர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

  அதுபோல், கலபுரகியிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், முன் எச்சரிக்கையாக சில ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகுவும் கலபுரகி போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார். 3 மாநகராட்சிகள் மற்றும் நகரசபையில் காலியாக உள்ள இடங்களுக்கு நடைபெறும்தேர்தலை அமைதியாக நடத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 6-ந் தேதி நடைபெற உள்ளது.

Next Story