பெட்ரோல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்து மத்திய நிதி மந்திரியுடன் பேச்சுவார்த்தை - பசவராஜ் பொம்மை
பெட்ரோல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்து மத்திய நிதி மந்திரியுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
சிலிண்டர் விலை உயர்வு
கர்நாடகம் உள்பட நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. குறிப்பாக வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டரின் விலை கடந்த 15 நாட்களில் ரூ.50 உயர்ந்திருக்கிறது. சிலிண்டர் விலை உயர்வால் சாதாரண ஏழை மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து பெங்களூருவில் நேற்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.
பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்து நேற்று உப்பள்ளியில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
மத்திய மந்திரியுடன் பேச்சுவார்த்தை
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக கியாஸ் சிலிண்டரின் விலையும் அதிகரித்து உள்ளது. இந்த விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுடன் ஆலோசனை நடத்தப்படும். வருகிற 5-ந்தேதி நிர்மலா சீதாராமன் பெங்களூருவுக்கு வருகை தர உள்ளார்.
அன்றைய தினம் அவருடன், பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வை பொருத்தே, பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சியிலும் இந்த விலை உயர்வு இருந்தது. காங்கிரசார் இந்த விவகாரம் பற்றி பேச தேவையில்லை. காங்கிரஸ் கட்சியினரும் ஆட்சியில் இருந்துள்ளனர். அவர்களுக்கும் தெரியும்.
கேரளாவில் இருந்து வருபவர்கள்...
கேரளாவில் இருந்து வருபவர்கள் போலி கொரோனா நெகட்டிவ் சான்றிதழ்களுடன் வருவது பற்றி விசாரிக்கப்படும். அதுபோன்ற போலி சான்றிதழ்களுடன் வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கர்நாடக எல்லை பகுதியில் கேரளாவில் இருந்து வருபவர்கள் முழுமையாக சோதனை செய்யப்படுகிறார்கள். போலி நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கேரள எல்லை பகுதியில் இருக்கும், கர்நாடகத்தின் 20 கிலோ மீட்டருக்குள் வசிக்கும் மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடக்கிறது.
கேரளாவில் இருந்து வருபவர்களை கண்காணிக்கும்படி ஒவ்வொரு மாநில அரசுக்கும், மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, கேரளாவில் இருந்து கர்நாடகத்திற்கு பஸ், ரெயில் மூலமாக வருபவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர். குறிப்பாக நர்சிங் மாணவிகள், பிற மாணவர்கள் கர்நாடகத்திற்கு வந்தால், ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். ஒரு வாரம் பின்பு நெகட்டிவ் சான்றிதழ் வந்ததும் விடுவிக்கப்படுகின்றனர். சில மாவட்டங்களில் தொடக்க பள்ளிகள் தொடங்கப்பட்டு இருப்பது குறித்து விசாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story