கோடநாடு வழக்கில் முழு விசாரணை நடத்த 4 வார கால அவகாசம்


கோடநாடு வழக்கில் முழு விசாரணை நடத்த 4 வார கால அவகாசம்
x
தினத்தந்தி 3 Sept 2021 6:20 AM IST (Updated: 3 Sept 2021 6:20 AM IST)
t-max-icont-min-icon

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முழு விசாரணை நடத்த போலீசாருக்கு 4 வார கால அவகாசம் வழங்கி ஊட்டி கோர்ட்டு உத்தரவிட்டது.

ஊட்டி

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முழு விசாரணை நடத்த போலீசாருக்கு 4 வார கால அவகாசம் வழங்கி ஊட்டி கோர்ட்டு உத்தரவிட்டது.

கோடநாடு வழக்கு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் 24.4.2017 அன்று காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. 

இதுதொடர்பாக சயான் உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த வழக்கில் கைதாகி ஜாமீனில் இருக்கும் சயானிடம் போலீசார் கோர்ட்டு அனுமதியுடன் விசாரணை நடத்தி ரகசிய வாக்குமூலம் பெற்றனர். 

அதேபோல் விபத்தில் பலியான ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜின் அண்ணன் தனபால் மற்றும் சம்பவம் நடந்த அன்று கோத்தகிரி, கெரடாமட்டம், கோடநாடு மற்றும் கூடலூரில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் பெண் இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட போலீசாரிடம் விசாரணை நடத்தினர்.

முழு விசாரணை

இந்த நிலையில் ஊட்டி கோர்ட்டில் கோடநாடு வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. காலை 11.30 மணிக்கு விசாரணை தொடங்கியது. குன்னூர் சிறையில் உள்ள வாளையாறு மனோஜை போலீசார் அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். ஜாமீனில் உள்ள சயான் ஆஜரானார். மாவட்ட முதன்மை நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் விசாரணை நடந்தது. 

சதீசன், திபு உள்பட 8 பேர் ஆஜராகவில்லை. இதுகுறித்து அவர்களது தரப்பு வக்கீல்கள் மனுதாக்கல் செய்தனர். சம்மன் கிடைக்க பெறாததால் கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் ஆஜராகவில்லை.

4 வார கால அவகாசம்

அரசு தரப்பில் சிறப்பு வக்கீல்கள் கனகராஜ், ஷாஜகான் ஆகியோர் ஆஜராகி, சென்னை ஐகோர்ட்டு கூடுதல் விசாரணை நடத்த தடை இல்லை என்று உத்தரவிட்டு உள்ளது. எனவே கோடநாடு வழக்கில் முழு விசாரணை நடத்த கூடுதலாக 4 வாரம் கால அவகாசம் வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்தனர். 

அந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி முழு விசாரணை நடத்த போலீசாருக்கு 4 வார கால அவகாசம் வழங்கினார். அத்துடன் வழக்கு விசாரணையை அடுத்த மாதம்(அக்டோபர்) 1-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார். 

உண்மைகள் வெளிவரும்

வழக்கு விசாரணை குறித்து அரசு சிறப்பு வக்கீல் ஷாஜகான் நிருபர்களிடம் கூறியதாவது:- கோடநாடு வழக்கில் இன்று(அதாவது நேற்று) மேல் புலன் விசாரணை தேவைப்படுவதால் 4 வார கால அவகாசம் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இதை ஏற்று நீதிபதி சஞ்சய் பாபா வழக்கு விசாரணையை தள்ளி வைத்தார். கோடநாடு எஸ்டேட்டில் ஒரு காவலாளி தாக்கப்பட்டு உள்ளார். ஒரு காவலாளி கொலை செய்யப்பட்டார். கொள்ளை சம்பவம் நடந்து உள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் சந்தேக மரணமடைந்தார். விசாரணை நடந்து வந்த நிலையில், ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.

இது தனித்தனி சம்பவங்களாக இருந்தாலும், ஒன்றுக்கொன்று தொடர்புடையதா என்று மேல் புலன் விசாரணை செய்ய வேண்டும். இந்த வழக்கில் ஒரு சில விஷயங்கள் மூடி மறைக்கப்பட்டு உள்ளது. முழு விசாரணைக்கு பின்னர் அறிக்கை தாக்கல் செய்யப்படும். 

வழக்கு தொடர்பாக தேவைப்பட்டால் யாரை வேண்டுமானாலும் விசாரிக்கலாம். கூடுதல் விசாரணையில் காலதாமதம் ஏற்படுவதாக கூறப்பட்டாலும், வழக்கு தொடர்பாக முழு உண்மைகளையும் வெளியே கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கோர்ட்டில் பரபரப்பு

வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட திபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோரது வக்கீல் விஜயன் கூறும்போது, வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, இளவரசி, சஜீவன் உள்பட 15 பேரிடம் விசாரணை நடத்த கோரி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு, விரைவில் விசாரணைக்கு வருகிறது என்றார். 

விசாரணையின்போது ஊட்டி கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையொட்டி கோர்ட்டு முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, கயிறு கட்டப்பட்டு இருந்தது.


Next Story