கோடநாடு வழக்கில் முழு விசாரணை நடத்த தனிப்படை அமைப்பு


கோடநாடு வழக்கில் முழு விசாரணை நடத்த தனிப்படை அமைப்பு
x
தினத்தந்தி 3 Sept 2021 6:20 AM IST (Updated: 3 Sept 2021 6:20 AM IST)
t-max-icont-min-icon

கோடநாடு வழக்கில் முழு விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளதாக நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் தகவல் தெரிவித்து உள்ளார்.

ஊட்டி

கோடநாடு வழக்கில் முழு விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளதாக நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் தகவல் தெரிவித்து உள்ளார்.

கோடநாடு வழக்கு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை நாளுக்குநாள் சூடுபிடித்து வருகிறது. வழக்கில் முதல் குற்றவாளியாக கருதப்படும் சயானிடம் போலீசார் விசாரணை நடத்தி ரகசிய வாக்குமூலம் பெற்றனர். அப்போது வழக்கில் முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பது குறித்து கூறியதாக தெரிகிறது. 

மேலும் அந்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ், சேலத்தில் நடந்த விபத்தில் இறந்தார். இது தொடர்பாக அவரது அண்ணன் தனபாலிடம் நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் விசாரணை நடத்தினார். இது தவிர சம்பவத்தன்று பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

தனிப்படை

இந்த நிலையில் நேற்று ஊட்டி கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, முழு விசாரணை நடத்த கால அவகாசம் கோரி அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி சஞ்சய் பாபா, அதற்கு 4 வார கால அவகாசம் வழங்கி விசாரணையை வருகிற அக்டோபர் 1-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இதற்கிடையே வழக்கில் சேர்க்கப்பட்ட அரசு தரப்பு சாட்சிகள் மற்றும் சந்தேகிக்கப்படும் நபர்களிடம் விசாரணை நடத்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

முக்கிய சாட்சிகளிடம் விசாரணை

இதுகுறித்து நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் கூறும்போது, கோடநாடு வழக்கில் முழு விசாரணை நடத்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகர் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படையினர் வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்களிடம் விசாரணை நடத்துவார்கள் என்றார். 

ஏற்கனவே அரசு தரப்பு சாட்சிகள் 103 பேரில் 41 பேரிடம் மட்டும் விசாரணை நடத்தப்பட்டது. மற்றவர்களிடம் விசாரணை நடைபெறவில்லை. இதனால் முக்கிய சாட்சிகளிடம் தனிப்படையினர் விசாரணை நடத்த உள்ளனர். 

கோர்ட்டில் அறிக்கை

இது தவிர கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், பங்களாவில் கணிணி ஆபரேட்டராக பணிபுரிந்து தற்கொலை செய்துகொண்ட தினேஷ்குமாரின் தந்தை போஜன் உள்ளிட்ட நபர்களிடம் விசாரணை நடத்தபடுகிறது. 

தொடர்ந்து ஒரு மாதம் விசாரணை நடத்தி ஊட்டி கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய இருக்கின்றனர். விசாரணை நடத்தும் இடம் ரகசியமாக வைக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் இந்த வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. 


Next Story