தொடர் விபத்துகளால் போக்குவரத்து பாதிப்பு


தொடர் விபத்துகளால் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 3 Sep 2021 12:50 AM GMT (Updated: 3 Sep 2021 12:50 AM GMT)

கூடலூர்-ஊட்டி சாலையில் தொடர் விபத்துகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கூடலூர்

கூடலூர்-ஊட்டி சாலையில் தொடர் விபத்துகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கார்கள் மோதல்

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு கூடலூர் பகுதியில் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. கூடலூர் ராஜகோபாலபுரம் பகுதியில் நேற்று காலை 8 மணிக்கு ஒரு கார் வந்தது. தொடர்ந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. 

அப்போது எதிரே வந்த மற்றொரு கார் மீது மோதி நின்றது. இந்த கண்ட பொதுமக்கள் பயத்தில் ஓட்டம் பிடித்தனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் 2 கார்களும் சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக கார்களில் இருந்தவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

போக்குவரத்து பாதிப்பு

இதையடுத்து அதே பகுதியில் மதியம் 12.30 மணிக்கு ஒரு ஆட்டோ சென்றது. பின்னர் பக்கவாட்டில் வந்த கார் மீது மோதாமல் இருக்க திருப்பியபோது சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் ஆட்டோ மோதி நின்றது.

இதில் ஆட்டோவில் அமர்ந்திருந்த 2 பெண்கள் காயம் அடைந்தனர். மேலும் ஆட்டோவின் முன்பகுதி சேதமடைந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பள்ளத்தில் சிக்கிய பஸ்

இது மட்டுமின்றி கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஊசிமலை காட்சிமுனை அருகே சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இங்கு மாலை 5.30 மணிக்கு மழைநீர் வடிகால் அமைப்பதற்காக ராட்சத குழாய் பதிக்கும் பணி நடந்தது. அப்போது கூடலூரில் இருந்து சென்ற ஒரு லாரி, அங்குள்ள பள்ளத்தில் சிக்கியது. 

தொடர்ந்து அதன்பின்னால் சென்ற அரசு பஸ்சும் சிக்கியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழையும் பெய்ததால் பள்ளத்தில் சிக்கிய வாகனங்களை உடனடியாக மீட்க முடியவில்லை. இதனால் இரவு 7 மணி வரை அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கபட்டது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.


Next Story