கிருஷ்ணாபுரம் அம்மபள்ளி அணை திறப்பு; கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு
கிருஷ்ணாபுரம் அம்மபள்ளி அணை திறக்கப்பட்டு கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தரைப்பாலங்கள் மூழ்கின.
தண்ணீர் திறப்பு
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கார்வேட்டிநகரம் மண்டலம் கிருஷ்ணாபுரம் என்ற கிராமத்தில் அம்மபள்ளி அணை உள்ளது. இந்த அணை உள்ள பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த மாதம் 26-ந்தேதி கிருஷ்ணாபுரம் அம்மபள்ளி அணை திறக்கப்பட்டது. அப்போது வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.தற்போது மீண்டும் அணை நிரம்பியதால் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் ஆந்திர மாநில நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் தண்ணீரை திறந்து விட்டனர். அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கொசஸ்தலை ஆற்றில் பள்ளிப்பட்டு பகுதிக்கு நேற்று அதிகாலை 3 மணி அளவில் வந்து சேர்ந்தது.
தரைப்பாலங்கள் மூழ்கின
நேற்று அதிகாலை 4½ மணி அளவில் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டது. அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கொசஸ்தலை ஆற்றில் பாய்ந்தது. இதனால் பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் உள்ள கிராம மக்களுக்கு தண்டோரா மூலம் வருவாய் துறையினர் எச்சரிக்கை செய்தனர். இரவு 9 மணி அளவில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் பள்ளிப்பட்டு பகுதியில் அதிகாலை 3 மணியளவில் வந்து சேர்ந்தது. இதனால் கீழ்கால்பட்டடை, சாமந்தவாடா நெடியம் போன்ற பகுதிகளில் கொசஸ்தலை ஆற்றில் உள்ள தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கின.
ஆற்றில் இறங்க வேண்டாம்
இதனால் இந்த தரைப்பாலங்களின் அருகே போலீசாரும், வருவாய்த்துறையினரும் பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்காதபடி எச்சரிக்கையாக காவல் காத்தனர். பொதுமக்களில் சிலர் ஆற்றில் வெள்ளம் ஓடுவதையும் கண்டுகொள்ளாமல் இறங்கி செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் எச்சரிக்கை செய்து திருப்பி அனுப்பினர். பள்ளிப்பட்டு அடுத்த கீழ்கால்பட்டடை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை அத்தியாவசியப் பொருட்களை வாங்க பள்ளிப்பட்டுக்கு கால்நடையாக நடந்து வந்தனர். அப்போது ஆற்றில் தரை பாலத்திற்கு மேல் வெள்ளம் அதிக அளவில் பாய்ந்தது.
இதனால் கரையில் நின்று கொண்டிருந்த போலீசார் அவர்களை ஆற்றில் இறங்க வேண்டாம் என்று எச்சரிக்கை செய்து திருப்பி அனுப்பினர். இதனால் அந்த கிராம மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
Related Tags :
Next Story