பட்டிவீரன்பட்டி அருகே மினி வேன், மொபட் மோதிய விபத்தில் 2 பெண்கள் பலி


பட்டிவீரன்பட்டி அருகே மினி வேன், மொபட் மோதிய விபத்தில் 2 பெண்கள் பலி
x
தினத்தந்தி 3 Sep 2021 2:16 PM GMT (Updated: 2021-09-03T19:46:39+05:30)

பட்டிவீரன்பட்டி அருகே மினி வேன், மொபட் நேருக்குநேர் மோதிய விபத்தில் 2 பெண்கள் பலியாகினர். டிரைவர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

பட்டிவீரன்பட்டி:
பட்டிவீரன்பட்டி அருகே மினி வேன், மொபட் நேருக்குநேர் மோதிய விபத்தில் 2 பெண்கள் பலியாகினர். டிரைவர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். 
நேருக்குநேர் மோதல்
திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை அருகே உள்ள சுந்தரராஜபுரத்தை சேர்ந்தவர் துரையன் (வயது 52). விவசாயி. இவரது மனைவி புவனேஸ்வரி (32). துரையனுக்கு சொந்தமான தோட்டம், பக்கத்து கிராமமான நல்லாம்பிள்ளையில் உள்ளது. இந்தநிலையில் நேற்று காலை இவர், தனது மனைவி, மாமியார் பாப்பாத்தி (60) மற்றும் அதே ஊரை சேர்ந்த இந்துராணி (55) ஆகியோரை மொபட்டில் ஏற்றிக்கொண்டு நல்லாம்பிள்ளை தோட்டத்திற்கு சென்று கொண்டிருந்தார். 
திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலையில் சாலைப்புதூர் என்ற பகுதியில் அவர்கள் வந்தபோது, எதிரே தேனியில் இருந்து திண்டுக்கல் நோக்கி மினி வேன் ஒன்று வந்தது. அந்த வேனை தஞ்சாவூரை சேர்ந்த கார்த்திக் ஓட்டிவந்தார். இதற்கிடையே மொபட்டும், மினி வேனும் கண்ணிமைக்கும் நேரத்தில் நேருக்குநேர் மோதியது. இதில் மொபட்டும், மினிவேனும் சாலையோரத்தில் கவிழ்ந்தது. 
2 பெண்கள் பலி
இந்த விபத்தில் மொபட்டில் வந்த துரையன் உள்பட 4 பேரும் தூக்கிவீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் உயிருக்கு போராடினர். இதேபோல் மினிவேனில் வந்த டிரைவரும் படுகாயம் அடைந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் விபத்தில் சிக்கிய 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து புவனேஸ்வரி மட்டும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். மற்ற 4 பேருக்கும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே அங்கு சிகிச்சை பெற்ற இந்துராணியும் பரிதாபமாக இறந்தார். இதனால் இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது. 
தற்போது மினி வேன் டிரைவர் கார்த்திக், பாப்பாத்தி ஆகியோர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும், துரையன் திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story