அடையாள அட்டை பெற திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த மாற்றுத்திறனாளிகள்
அடையாள அட்டை பெற திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குவிந்தனர். மேலும் நீண்ட நேரம் காக்க வைப்பதாக மாற்றுத்திறனாளிகள் புகார் தெரிவித்தனர்.
திண்டுக்கல்:
அடையாள அட்டை பெற கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குவிந்தனர். மேலும் நீண்ட நேரம் காக்க வைப்பதாக மாற்றுத்திறனாளிகள் புகார் தெரிவித்தனர்.
மாற்றுத்திறனாளிகள் அலுவலகம்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு அவர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்படும். இதில் முதுகு தண்டுவடம் பாதித்தவர்கள், விபத்தில் கை, கால்களை இழந்தவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் 3-வது வெள்ளிக்கிழமைகளில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு அடையாள அட்டை வழங்கப்படும்.
அந்த வகையில் இந்த மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான நேற்று மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில் நடந்தது. இதையடுத்து காலை 7 மணி முதலே அடையாள அட்டை பெறுவதற்காக மாற்றுத்திறனாளிகள் வரத்தொடங்கினர். நேரம் செல்லச்செல்ல மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில் கூட்டம் அலைமோதியது.
நெருக்கமாக நின்றனர்
இதனால் மாற்றுத்திறனாளிகளும், அவர்களுடன் வந்தவர்களும் சமூக இடைவெளியின்றி நெருக்கமாக நின்று காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதற்கிடையே மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசோதனை செய்து அடையாள அட்டை வழங்கும் பணியும் தொடங்கியது. 2 டாக்டர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசோதனை நடத்தினர். ஆனால் கூட்டம் அதிகமாக இருந்ததால் நீண்ட நேரம் மாற்றுத்திறனாளிகள் காத்திருக்க வேண்டி இருந்தது.
நிற்க கூட இயலாத மாற்றுத்திறனாளிகளை உதவியாளர்கள் மற்றும் உறவினர்கள் தூக்கி வந்து அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தனர். அவர்களும் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் செல்வநாயகம் கூறுகையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில் அடையாள அட்டை பெற வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு அடிப்படை வசதிகள் முறையாக செய்து கொடுக்கப்படுவதில்லை.
கொரோனா பரவும் அபாயம்
மேலும் சமூக இடைவெளியுடன் அவர்கள் காத்திருக்கும் வகையில் தேவையான முன்னேற்பாடுகளை நலத்துறை அதிகாரிகள் செய்வது இல்லை. இதனால் மாற்றுத்திறனாளிகள் நெருக்கமாக நிற்கின்றனர். இதன் காரணமாக கொரோனா பரவும் அபாயம் உள்ளது. அதேபோல் மாற்றுத்திறனாளிகள் அமருவதற்கு இருக்கை வசதி கூட செய்வதில்லை. இதனால் தரையில் அமரும் அவல நிலைக்கு மாற்றுத்திறனாளிகள் தள்ளப்பட்டுள்ளனர். நீண்ட நேரம் மாற்றுத்திறனாளிகளை காக்க வைக்கின்றனர். கூட்ட நெரிசலை தவிர்க்க அந்தந்த தாலுகாவிலேயே அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம்களை நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story