விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த அனுமதிக்க வேண்டும்; பா.ஜ.க. தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் பேட்டி


விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த அனுமதிக்க வேண்டும்; பா.ஜ.க. தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் பேட்டி
x
தினத்தந்தி 3 Sep 2021 2:36 PM GMT (Updated: 2021-09-03T20:06:22+05:30)

தமிழகத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் தெரிவித்தார்.

கொடைக்கானல்:
கொரோனா பரவலை தடுப்பது மற்றும் தடுப்பூசி போட்டுக்கொள்வதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பா.ஜ.க. சார்பில் மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக கொடைக்கானலில் உள்ள கலையரங்கம் பகுதியில் அக்கட்சியின் சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. 
அப்போது அவர் பொதுமக்களுக்கு முக கவசங்களையும், கிருமிநாசினியையும் வழங்கி, கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு மத்திய அரசின் மீது குற்றம்சாட்டி வருகிறார். பொது சொத்துகளை மத்திய அரசு விற்பனை செய்யப்போகிறது என கூறுகிறார். ஆனால் அவை சுமார் ரூ.6 லட்சம் கோடிக்கு குத்தகைக்கு விடப்பட உள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மும்பை, புனே, டெல்லி போன்ற நகரங்களில் உள்ள ெரயில் நிலையங்கள் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டது. தமிழகத்தில் பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு பாதுகாப்பு இல்லை. அத்துடன் பிரிவினைவாதிகளுக்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது. 
தி.மு.க. அரசு இந்து மத நம்பிக்கைக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களை மூட உத்தரவிட்டுள்ள அரசு, டாஸ்மாக் கடைகளை மட்டும் திறந்து வைக்கிறது. தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். எனவே இதுதொடர்பாக தமிழக அரசு மறுபரிசீலனை செய்து விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மாவட்ட செயலாளர் கணேஷ்பிரபு, கிழக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு பொதுச்செயலாளர் சேவியர், நகர செயலாளர்கள் சரவணன், கணேசன், இளைஞரணி செயலாளர் ஹரி ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story