காய்கறி நாற்றுக்கள் பெற முன்பதிவு


காய்கறி நாற்றுக்கள் பெற முன்பதிவு
x
தினத்தந்தி 3 Sept 2021 9:09 PM IST (Updated: 3 Sept 2021 9:09 PM IST)
t-max-icont-min-icon

காய்கறி நாற்றுக்கள் பெற முன்பதிவு

போடிப்பட்டி,
உடுமலை வட்டாரத்தில் காய்கறிகள் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் முன்பதிவு செய்து மானிய விலையில் நாற்றுக்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாற்றுப்பண்ணைகள்
உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் காய்கறிகள் சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இவ்வாறு சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் பெருமளவில் தனியார் நாற்றுப்பண்ணைகள் மூலமே நாற்றுகளை கொள்முதல் செய்து நடவு செய்கின்றனர். அதேநேரத்தில் மடத்துக்குளத்தையடுத்த மடத்தூரில் அமைந்துள்ள அரசு நாற்றுப்பண்ணையில் நாற்றுகள் உற்பத்தி செய்து மானிய விலையில் வழங்கினாலும் விவசாயிகள் அவற்றை வாங்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை.இதனால் பெருமளவு நாற்றுக்கள் வீணாகும் நிலை ஏற்படுகிறது.
இதனால் நாற்றுப்பண்ணையில் தற்போது குறைந்த அளவிலேயே நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் குறிப்பிட்ட பயிருக்கான நாற்றுக்களைப் பெற விரும்பி அங்கு செல்லும் விவசாயிகள் நாற்றுக்கள் கிடைக்காமல் ஏமாற்றமடையும் நிலையும் ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க விவசாயிகள் முன்பதிவு மூலம் நாற்றுக்கள் பெறும் திட்டத்தை தோட்டக்கலைத்துறையினர் செயல்படுத்தி வருகின்றனர். 
மானியம்
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
விவசாயிகளுக்கு தரமான காய்கறிகள் மற்றும் பழவகை நாற்றுக்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காகவே அரசு நாற்றுப்பண்ணை செயல்படுகிறது. இதனை விவசாயிகள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும். இதற்காகவே முன்பதிவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 
இதன்படி தக்காளி, மிளகாய், கத்தரி, தர்பூசணி, பாகல், புடலை, பீர்க்கன் மற்றும் முருங்கை போன்ற பயிர்களை சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் முன்கூட்டியே உடுமலை வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.அவர்களுக்கு தேவைப்படும் எண்ணிக்கையிலான நாற்றுகள் தயார் நிலையில் இருக்கும்போது விவசாயிகள் நேரடியாக சென்று நாற்றுக்களைப் பெற்றுச் செல்லலாம்.இதற்கு ஏக்கருக்கு 8 ஆயிரம் ரூபாய் வரை மானியமும் பெற முடியும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர். 

Next Story