சாம்பார் வெள்ளரிக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை


சாம்பார் வெள்ளரிக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை
x
தினத்தந்தி 3 Sept 2021 9:13 PM IST (Updated: 3 Sept 2021 9:13 PM IST)
t-max-icont-min-icon

சாம்பார் வெள்ளரிக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை

போடிப்பட்டி, 
உடுமலை சுற்றுவட்டாரப்பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சாம்பார் வெள்ளரிக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
பசுமைக்குடில்
கோடைகாலத்தில் உடல் வெப்பத்தைத் தணிப்பதில் வெள்ளரிக்கு தனி இடம் உண்டு. உடுமலை, பெதப்பம்பட்டி பகுதிகளில் ஒருசில விவசாயிகள் பசுமைக்குடில் அமைத்து வெள்ளரி சாகுபடி செய்து வந்தனர்.ஆனால் நூல் புழு தாக்குதல், சந்தைப்படுத்துவதில் சிக்கல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பலரும் வெள்ளரி சாகுபடியைக் கைவிட்டுள்ளனர். இந்த நிலையில் பசுமைக்குடில் அமைக்காமல் குறுகிய காலத்தில் மகசூல் ஈட்டக்கூடிய சாம்பார் வெள்ளரி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் தற்போது இதற்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
வெள்ளரியில் சிறு வெள்ளரி, நாட்டு வெள்ளரி, காட்டு வெள்ளரி, சாம்பார் வெள்ளரி என்று பல வகைகள் உள்ளது. இது சாம்பார் வெள்ளரி என்று அழைக்கப்பட்டாலும் பூசணிக்காய் போலவே பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் பூசணிக் கொடிகளைப் போலவே தரையில் படர விட்டு விளைவிக்கப்படுகிறது. சாம்பார் வெள்ளரியை தனிப்பயிராகவும், கரும்புப்பயிரில் ஊடுபயிராகவும் சாகுபடி செய்யலாம். நமது பகுதியில் சாம்பார் வெள்ளரி பயன்பாடு அதிக அளவில் இல்லை.
வெளிமாநில வியாபாரிகள்
ஆனால் கேரள மாநில மக்களின் விருப்ப உணவுகளில் ஒன்றாக சாம்பார் வெள்ளரி உள்ளது. ஆந்திர மாநிலத்திலும் இதன் பயன்பாடு அதிக அளவில் உள்ளது. ஆனால் தற்போது கேரளாவில் கொரோனா தொற்று பரவல் அதிக அளவில் உள்ளதால் அங்கு சாம்பார் வெள்ளரியை அனுப்புவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளது.இதனால் கிலோ ரூ.20-க்கு மேல் விற்பனையான சாம்பார் வெள்ளரியை தற்போது ரூ.5-க்கும் குறைவாகவே விற்பனை செய்யும் நிலை உள்ளது.
வெளி மாநில வியாபாரிகள் வராத நிலையிலும் உள்ளூர் வியாபாரிகள் சிலர் இவற்றை கொள்முதல் செய்கிறார்கள்.ஆனால் சில வேளைகளில் உரிய நேரத்தில் அவற்றை விற்பனை செய்ய முடியாததால் பெருமளவு அழுகி வீணாகி விடுகிறது.இதனால் நஷ்டத்தை சந்திக்கும் விவசாயிகள் சாம்பார் வெள்ளரியை கொள்முதல் செய்வதில் தயக்கம் காட்டுகிறார்கள். குறிப்பிட்ட பருவத்தில் அறுவடை செய்யாமல் விட்டால் கொடியுடன் சேர்ந்து அழுகி வீணாகி விடும் என்பதால் காய்களைப் பறித்து, வந்த விலைக்கு விற்பதைத் தவிர வேறு வழியில்லை'என்று விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். 

Next Story