சாய்ந்து நிற்கும் மரத்தால் போக்குவரத்துக்கு இடையூறு
சாய்ந்து நிற்கும் மரத்தால் போக்குவரத்துக்கு இடையூறு
திருப்பூர்,
திருப்பூர் கொங்கு மெயின் ரோடு எம்.எஸ். நகர் அருகே ஒரு மரம் ஆபத்தான வகையில் சாய்ந்து நிற்கிறது. போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள இந்த மரத்தால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
போக்குவரத்திற்கு இடையூறு
திருப்பூர் கொங்கு மெயின் ரோடு எம்.எஸ்.நகர் அருகே, ரோட்டோரத்தில் உள்ள ஒரு பெரிய மரம் சாய்ந்த நிலையில் உள்ளது. இந்த மரம் ரோட்டின் குறுக்காக சாய்ந்து நிற்பதால் இப்பகுதியில் வாகனப்போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி தற்போது இப்பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டுமான பணிகள் நடந்து வருவதால் வாகனங்கள் செல்வதற்கு போதுமான இடமின்றி வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், ஒரே நேரத்தில் இரண்டு கனரக வாகனங்கள் எதிரெதிரே வரும் போது சாய்ந்து நிற்கும் மரத்தில் உரசியபடி செல்கின்றன.
விபத்து அபாயம்
இந்த மரத்தில் அடிக்கடி வாகனங்கள் உரசியபடி செல்வதால் மரம் வலுவிழந்த நிலையில் உள்ளது. இதனால் எப்போது வேண்டுமானாலும் மரம் கீழே சாய்ந்து விழும் அபாயம் உள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அச்சத்தில் உள்ளனர். வாகன ஓட்டிகளை அவதிக்குள்ளாக்கி வரும் இந்த மரத்தை அகற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பல முறை முறையிட்ட பின்னரும் அதிகாரிகள் அலட்சியப்போக்கில் இருப்பதாக இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் முன் இந்த மரத்தை வெட்டி அகற்ற அதிகாரிகள் முன்வருவார்களா?.
Related Tags :
Next Story