நிலுவையில் உள்ள மனுக்களுக்கு 15 நாட்களில் தீர்வு
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள மனுக்களுக்கு 15 நாட்களில் தீர்வு காண வேண்டும் என்று பொது தகவல் அலுவலர்களுக்கு மாநில தகவல் ஆணையர் செல்வராஜ் உத்தரவிட்டார்.
தேனி:
தகவல் ஆணையர் ஆய்வு
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்கள் கேட்கப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்களின் நிலை குறித்து அறியும் வகையில் மாநில தகவல் ஆணையர் செல்வராஜ் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆய்வுக்கூட்டம் நடத்தினார். கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நிலுவையில் உள்ள மனுக்களுக்கு தீர்வு காண்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. சில மனுக்கள் தீர்வும் காணப்பட்டன. நிலுவையில் உள்ள மனுக்களுக்கு 15 நாட்களில் தீர்வு காண வேண்டும் என்று பொதுத்தகவல் அலுவலர்களுக்கு மாநில தகவல் ஆணையர் உத்தரவிட்டார்.
கூட்டத்தை தொடர்ந்து மாநில தகவல் ஆணையர் செல்வராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
15 நாட்களில் தீர்வு
தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005-ன் நோக்கம் அரசு அலுவலகங்கள் ஒவ்வொன்றின் செயல்பாட்டிலும் வெளிப்படையான, ஒளிவுமறைவற்ற நிலையை கொண்டு வருவதும், அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் பணியாற்றுபவர்கள் பொறுப்புணர்வை மேம்படுத்துவதும் ஆகும். அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை பெற மனு அளிக்கலாம். குறிப்பிட்ட காலத்துக்குள் தகவல் கொடுக்க தவறும் பட்சத்தில், மேல் முறையீட்டு அலுவலருக்கு மனு தாக்கல் செய்யலாம். அவரும் தகவல் கொடுக்காவிட்டால் 2-வது மேல் முறையீடாக மாநில தகவல் ஆணையத்துக்கு மனு அளிக்கலாம்.
அந்த வகையில் தேனி மாவட்டத்தில் இருந்து வந்த 63 மனுக்கள் நிலுவையில் இருந்தன. அந்த மனுக்கள் குறித்தும் காணொலி காட்சி மூலம் ஆய்வுக்கூட்டம் நடத்தினோம். அதில், 23 வழக்குகளில் தீர்வு காணப்பட்டன. மீதம் உள்ள மனுக்களில் 33 மனுக்கள் மீது விசாரணை நடத்தும் வகையில் இந்த ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில், 22 மனுக்கள் தீர்வு காணப்பட்டன. நிலுவையில் உள்ள மனுக்களையும் 15 நாட்களுக்குள் தீர்வு காண சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக மனுதாரர்களை நேரில் அழைத்து விசாரணை மேற்கொள்ள இயலாத சூழ்நிலை உள்ளதால், அந்தந்த பகுதியை சேர்ந்த பொதுத்தகவல் அலுவலர்களை அழைத்து ஆய்வு நடத்தப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜா மற்றும் அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story