குழாய் உடைந்து வீணாகிய குடிநீர்
கூடலூர்-குமுளி சாலையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி சென்றது.
தேனி :
தேனி மாவட்டம் கூடலூர், கம்பம், உத்தமபாளையம், கோம்பை, குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி ஆகிய பகுதிகளுக்கு லோயர்கேம்ப் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதற்காக லோயர்கேம்ப் பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் தனித்தனியாக அமைக்கப்பட்டு இருக்கின்றன.
இந்நிலையில் கூடலூர்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் நடு ரைஸ்மில் தெரு அருகே நேற்று காலை கம்பம் நகர பகுதிக்கு செல்லும் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கம்பம் நகராட்சி மற்றும் லோயர்கேம்பில் உள்ள குடிநீர் வடிகால் வாரியத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் நகராட்சி அதிகாரிகளோ, குடிநீர் வடிகால் வாரியத்துறை ஊழியர்களோ யாரும் சம்பவ இடத்திற்கு உடனே வரவில்லை.
இதனால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி வெளியேறியது. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து குடிநீருக்காக திறந்துவிடப்படும் தண்ணீர் வீணாகி செல்வதை தடுக்க குடிநீர் வடிகால் வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story