கிருஷ்ணகிரியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல்
கிருஷ்ணகிரியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது
கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்தி சாலை அருகில் உள்ள நல்லதம்பி செட்டி தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் முறையாக சாக்கடை கால்வாய் அமைக்காததால், சிறிய மழை பெய்தாலும் வீடுகளுக்குள் மழை நீருடன், சாக்கடைகழிவுநீரும் புகுந்து வந்தது. மேலும் தெரு முழுவதும் சேறும் சகதியும், கழிவுநீரும் தேங்கி பொதுமக்கள் நடமாட முடியாத அவல நிலை நீடித்து வந்தது.
இங்குள்ள சாக்கடை கால்வாயை சீரமைக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் பல முறை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக கிருஷ்ணகிரியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல குடியிருப்புகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.
சாலை மறியல்
அதன்படி நேற்று கிருஷ்ணகிரி நல்லதம்பி செட்டி தெருவில் உள்ள குடியிருப்புகளில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்ததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ேநற்று காந்திசாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் டவுன் போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நகராட்சியில் புகார் அளிக்கும்படி போலீசார் தெரிவித்தனர். இதனால் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story