திருப்பத்தூரில் காய்கறிகள் வெட்டி, சமைப்பது குறித்து விளக்கிய கலெக்டர்


திருப்பத்தூரில் காய்கறிகள் வெட்டி, சமைப்பது குறித்து விளக்கிய கலெக்டர்
x
தினத்தந்தி 3 Sept 2021 10:21 PM IST (Updated: 3 Sept 2021 10:21 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூரில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு நடந்த பயிற்சியில், கலெக்டர் அமர்குஷ்வாஹா காய் கறிகள் வெட்டி, சமைப்பது குறித்து விளக்கினார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு நடந்த பயிற்சியில், கலெக்டர் அமர்குஷ்வாஹா காய் கறிகள் வெட்டி, சமைப்பது குறித்து விளக்கினார்.

சிற்றுண்டி தயாரிக்கும் பயிற்சி

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு, சிற்றுண்டி, தேநீர் தயாரித்தல் குறித்த பயிற்சி திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் நடைபெற்றது. பயிற்சியில் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை வகித்து, உணவு தயாரிக்க காய்கறிகள் மற்றும் வெங்காயத்தை கத்தியால் துல்லியமாக வெட்டி உணவு தயாரிக்கும் முறை குறித்து விளக்கினார்.

அப்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் நகர பகுதி மற்றும் ஊரக பகுதிகளில் 7,000 மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகிறது. ஏலகிரி மலை, ஜவ்வாது மலை, பகுதிகளில் மலைவாழ் மக்கள் அதிக அளவு 100 சதவீத தரமான தேன் தயாரிக்கிறார்கள். ஆனால் அவர்கள் தயாரிக்கும் தேனுக்கு என்று நிறுவனப்பெயர் இல்லாமல் இருக்கிறது. 

தொழில் முனைவோராக

மகளிர் சுய உதவிக் குழுக்கள் தாங்கள் பெறும் நிதியின் மூலம் பல்வேறு தொழில்புரிந்து தொழில் முனைவோராக மாறவேண்டும். நமது மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு ஒரு நிறுவனப் பெயர் உருவாக்கப்பட வேண்டும். உங்களுக்கு தேவையான வங்கிக் கடன்  உள்ளிட்ட உதவிகளை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்கும். இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி நீங்கள் அனைவரும் தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

பயிற்சியில் பலவிதமான சுவையான தேநீர், உணவு, தயாரிப்பது குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் மகளிர் திட்ட அலுவலர் உமா மகேஸ்வரி, உதவி திட்ட அலுவலர்கள் வேதநாயகம், கலைச்செல்வன் மற்றும் சுய உதவிக்குழுவினர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலெக்டர் காய்களை நறுக்கி சமையல் குறிப்புகளை கூறியது, அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது.

Next Story