விழுப்புரம் மாவட்டத்தில் அரசு விதிமுறைகளை பின்பற்றி விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டும் கலெக்டர் மோகன் உத்தரவு


விழுப்புரம் மாவட்டத்தில் அரசு விதிமுறைகளை பின்பற்றி  விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டும் கலெக்டர் மோகன் உத்தரவு
x
தினத்தந்தி 3 Sept 2021 10:22 PM IST (Updated: 3 Sept 2021 10:22 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு விதிமுறைகளை பின்பற்றியே விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டும் என்று கலெக்டர் மோகன் அறிவுரை கூறினார்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுவது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் டி.மோகன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க பொது விழாக்களை தவிர்க்கவும், பொது இடங்களில் மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கவும், 

பொதுமக்கள் நலன் கருதியும் அமைப்புகளோ அல்லது தனிநபரோ பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுவதோ அல்லது சிலைகளை வைத்து விழா கொண்டாடுவதோ, விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று நீர்நிலைகளில் கரைப்பதற்கோ ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் அனுமதி இல்லை.


வீடுகளிலேயே கொண்டாட ...

எனவே விநாயகர் சதுர்த்தி விழாவை அவரவர் வீடுகளிலேயே கொண்டாட அறிவுறுத்தப்படுகிறது. தனிநபர்கள், தங்களது இல்லங்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட சிலைகளை அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைப்பதற்கும், கோவில்களின் வெளிப்புறத்திலோ, சுற்றுப்புறத்திலோ வைத்துச்செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த சிலைகளை பின்னர் முறையாக அகற்றுவதற்கு இந்து சமய அறநிலையத்துறையால் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் பண்டிகையை கொண்டாட தேவையான பொருட்களை வாங்க கடைகளுக்கோ, சந்தைகளுக்கோ செல்பவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திட வேண்டும், அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும். 

ஏற்கனவே வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் வழிபாடுகள் செய்வது, சாமி தரிசனம் செய்வது மற்றும் திருவிழாக்கள் நடத்துவதற்கான தடை அமலில் உள்ளதால் மேற்கண்ட தினங்களில் வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள், பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. 

எனவே பொதுமக்கள், பக்தர்கள் மேற்காணும் அறிவுரைகளை கட்டாயம் பின்பற்றி கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுத்திட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, விழுப்புரம் கோட்டாட்சியர் அரிதாஸ், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பழனிச்சாமி, இளங்கோவன், கணேசன், அருண் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story