குட்டத்துப்பட்டியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு பொதுமக்கள் சாலை மறியல்


குட்டத்துப்பட்டியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு  பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 3 Sep 2021 4:53 PM GMT (Updated: 2021-09-03T22:23:53+05:30)

குட்டத்துப்பட்டியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

கன்னிவாடி:
குட்டத்துப்பட்டி அருகே உள்ள கோனூர் நால்ரோட்டில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. இந்த கடையை குட்டத்துப்பட்டி ஊராட்சி அன்னை நகரில் இடமாற்றம் செய்வதற்காக புதிதாக கட்டிடம் கட்டும் வேலைகள் நடக்கிறது.  இதனிடையே டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் டாஸ்மாக் நிர்வாகம் இதை கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. 
இதனால் ஆத்திரமடைந்த அன்னை நகர், பெரியார் நகர் பொதுமக்கள் குட்டத்துப்பட்டியில் சுமார் 1 மணி நேரம் கொட்டும் மழையில் குடைபிடித்தபடி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் திண்டுக்கல் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 


Next Story