நெய்வேலியில் தனியார் பள்ளி ஆசிரியைகள் 2 பேருக்கு கொரோனா மாணவர்கள் கலக்கம்


நெய்வேலியில் தனியார் பள்ளி ஆசிரியைகள் 2 பேருக்கு கொரோனா மாணவர்கள் கலக்கம்
x
தினத்தந்தி 3 Sep 2021 4:58 PM GMT (Updated: 2021-09-03T22:28:34+05:30)

நெய்வேலி தனியார் பள்ளியில் ஆசிரியைகள் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் மாணவர்கள் கலக்கமடைந்தனர்.

நெய்வேலி, 

பள்ளிகள் திறப்பு

கொரோனா பரவல் குறைவு காரணமாக கடந்த 1-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிக்கூடங்கள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த 1-ந்தேதி முதல் 469 பள்ளிகள் திறக்கப்பட்டு இயங்கி வருகிறது. 
அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டதை உறுதி செய்வதுடன், பள்ளி திறப்புக்கு முன்பாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, நோய் தொற்று இல்லை என்பதை உறுதி செய்த பிறகே பள்ளிக்கு வரவேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. 

ஆசிரியைகளுக்கு கொரோனா

இந்த நிலையில் நெய்வேலி 17-வது வட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகள் 2 பேர், கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்துவிட்டு, முடிவு பெறாமல் நேற்று காலை பள்ளிக்கு வந்துள்ளனர். வந்த சில நிமிடங்களில் 2 ஆசிரியைகளின் செல்போன் எண்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் கொரோனா பாசிட்டிவ் என குறுந்தகவல் வந்தது. இதையறிந்த மாணவ-மாணவிகள், சக ஆசிரியர்கள் கலக்கமடைந்தனர். 
இதனிடையே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட அந்த 2 ஆசிரியைகளும் என்.எல்.சி. மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்கள். 
இந்த சம்பவத்தால் பள்ளி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 
மேலும் ஆசிரியைகள் தங்கி இருந்த பள்ளியின் ஓய்வு அறை கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஆசிரியைகள் 2 பேரும் கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டுக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story