சின்னசேலம் கள்ளக்குறிச்சி ரெயில் பாதை பணியை விரைந்து முடிக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
சின்னசேலம் கள்ளக்குறிச்சி இடையே ரெயில் பாதை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
சின்னசேலம்
11 கிராமங்கள் வழியாக
சின்னசேலம்-கள்ளக்குறிச்சி இடையே 16 கிலோ மீ்ட்டர் தூரத்துக்கு ரெயில் பாதை அமைக்க சின்னசேலம் ரெயில் நிலையத்தில் இருந்து வடக்கு, தெற்கு, கனியாமூர், வினைதீர்த்தாபுரம், கீழ் பூண்டி, இந்திலி, பொற்படாகுறிச்சி, தச்சூர், ஏமப்பேர், தென்கீரனூர், கள்ளக்குறிச்சி என 11 கிராமங்கள் வழியாக சுமார் 673 பட்டாதாரர்களிடமிருந்து சுமார் 50 ஏக்கர் நிலம் கையகப்படுத்த அளவீடு பணிகள் முடிந்து எல்லை கற்கள் நடப்பட்டு பல ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டது.
பின்னர் வியாபாரிகள், பொதுமக்கள் ஆட்சியாளர்களிடம் தொடர்ந்து குரல் கொடுத்ததன் அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து ரூ.118 கோடி நிதியை ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு பூமி பூஜையுடன் பணிகள் தொடங்கியது.
பாலம் அமைக்கும் பணி
இதில் முதல் கட்டமாக ரெயில் பாதையின் குறுக்கே 2 பெரிய பாலம், 22 சிறிய பாலங்கள், ஒரு மேம்பாலம், 10 தரைப் பாலங்கள் அமைக்கும் பணி தொடங்கி தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது. மேலும் தனியார் நிலங்களில் ரெயில் பாதை அமைக்க தண்டவாளங்கள், ஜல்லிகள், சிலிப்பர் கட்டைகள் உள்ளிட்ட தளவாட பொருட்கள் இறக்கி வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் பணி செய்ய முடியாமல் இருப்பதாக ஒப்பந்ததாரர்கள் தெரிவிக்கின்றனர்.
தனியார் நில உரிமையாளர்களிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்குண்டான இழப்பீட்டு தொகையை வழங்குவதற்கு நிர்வாக காரணங்களால் தாமதமாகி வருவதால் ரெயில் பாதை அமைக்கும் பணியிலும் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரெயில்பாதை அமைக்கும் பணி தொடங்கி 5 ஆண்டுகளை கடந்தும் இன்னும் ஆமை வேகத்திலேயே பணிகள் நடந்து வருவதால் பொதுமக்கள் ஆதங்கப்படுகின்றனர்.
விரைந்து முடிக்க வேண்டும்
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, நாங்களும் ரெயில்பாதை அமைக்கும் பணி விரைந்து முடிக்கப்பட்டு ரெயில்போக்குவரத்தும் நடைபெறும் என்ற ஆவலோடு இருந்தோம். ஆனால் தற்போது நடைபெற்று வரும் பணிகளை பார்க்கும்போது ரெயில்பாதை அமைக்கும் பணிகள் முடிவடையை மேலும் சில ஆண்டுகள் ஆகிவிடும்போல தெரிகிறது. எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு உரிய இழப்பீட்டு தொகையை சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களிடம் வழங்கி ரெயில் பாதை அமைக்கும் பணியை விரைந்து முடித்து ரெயில் போக்குவரத்து வசதியை செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story