ஓய்வு பெற்ற ஆசிரியரை ஏமாற்றி ரூ.49 ஆயிரம் அபேஸ்


ஓய்வு பெற்ற ஆசிரியரை ஏமாற்றி ரூ.49 ஆயிரம் அபேஸ்
x
தினத்தந்தி 3 Sep 2021 5:26 PM GMT (Updated: 3 Sep 2021 5:28 PM GMT)

ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்து தர கேட்ட ஓய்வு பெற்ற ஆசிரியரை ஏமாற்றி ரூ.49 ஆயிரம் அபேஸ் செய்த 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஊட்டி,

ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்து தர கேட்ட ஓய்வு பெற்ற ஆசிரியரை ஏமாற்றி ரூ.49 ஆயிரம் அபேஸ் செய்த 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஓய்வு பெற்ற ஆசிரியர்

ஊட்டியை சேர்ந்தவர் ராஜூ(வயது 72). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் நேற்று முன்தினம் ஊட்டியில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுக்க சென்றார். அங்குள்ள எந்திரத்தில் தனது ஏ.டி.எம். கார்டை 2 முறை பயன்படுத்தி தலா ரூ.9 ஆயிரம் பணம் எடுத்தார். 

3-வது முறை முயற்சி செய்தபோது, எந்திரத்தில் இருந்து பணம் வரவில்லை. இதனால் ராஜூ தனக்கு பின்னால் நின்ற வாலிபரிடம், தனது ஏ.டி.எம். கார்டை கொடுத்து பணம் எடுத்து தருமாறு கேட்டார். உடனே அந்த வாலிபர் அவரிடம் இருந்து ஏ.டி.எம். கார்டை வாங்கினார். ஆனால் அந்த ஏ.டி.எம். கார்டை எந்திரத்தில் செலுத்தாமல், வாலிபர் தனது ஏ.டி.எம். கார்டை செலுத்தினார். பின்னர் ராஜூவிடம் ரகசிய எண்ணை கேட்டு உள்ளீடு செய்தார். ஆனால் ரகசிய எண் தவறு என்று வந்தது. 

ரூ.49 ஆயிரம் அபேஸ்

இதனால் எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாக நினைத்து அந்த ஏ.டி.எம். கார்டை வாலிபரிடம் இருந்து பெற்றுக்கொண்டு ராஜூ வீடு திரும்பினார். சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.49 ஆயிரம் எடுக்கப்பட்டு உள்ளதாக செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்தது. 

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜூ உடனடியாக  ஊட்டி நகர மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று தனது வங்கி கணக்கின் பண பரிவர்த்தனையை நிறுத்தி வைத்தார். 

கண்காணிப்பு கேமரா காட்சிகள்

இதையடுத்து மோசடி நடந்த ஏ.டி.எம். மையத்தில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது ராஜூவிடம் ஏ.டி.எம். கார்டை மாற்றிக்கொடுத்து மோசடியில் ஈடுபட்ட வாலிபர், அதன்பிறகு தனது நண்பர்களுடன் வந்து அவரது வங்கி கணக்கில் இருந்து பணத்தை அபேஸ் செய்து சென்றது பதிவாகி இருந்தது. ஆனால் தனது ஏ.டி.எம். கார்டை ராஜூவிடம் கொடுத்து சென்றதால், அவர் யார் என்ற விவரங்கள் தெரியவந்தது.

4 பேர் கைது

இதைத்தொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட மேல்கூடலூரை சேர்ந்த கபில் (வயது 28), அவரது நண்பர்களான கூடலூரை சேர்ந்த ஸ்டாலின் (23), ஊட்டி பிஷப்டவுன் பகுதியை சேர்ந்த ஆகாஷ் (21), ஹரிஷ் (21) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். 

அவர்கள் மோசடி செய்த பணத்தில் ஊட்டியில் உள்ள துணிக்கடைகளுக்கு சென்று தங்களுக்கு விருப்பமான துணிகளை வாங்கியதும், ஒரு நகைக்கடையில் செயின் வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story