விவசாயி கொலைவழக்கில் குற்றவாளி கைது. தனிப்படை போலீசாருக்கு சூப்பிரண்டு பாராட்டு


விவசாயி கொலைவழக்கில் குற்றவாளி கைது. தனிப்படை போலீசாருக்கு சூப்பிரண்டு பாராட்டு
x
தினத்தந்தி 3 Sep 2021 6:31 PM GMT (Updated: 3 Sep 2021 6:31 PM GMT)

முன்விரோதம் காரணமாக விவசாயியை கொலை செய்து வாகன விபத்தில் இறந்தது போல் சித்தரித்தவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

காட்பாடி

முன்விரோதம் காரணமாக விவசாயியை கொலை செய்து வாகன விபத்தில் இறந்தது போல் சித்தரித்தவரை  தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

சாலையில் பிணம்

காட்பாடியில் இருந்து திருவலம் செல்லும் சாலையில் கடந்த 1-ந்தேதி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இறந்து கிடந்தார். தகவல் அறிந்ததும் காட்பாடி போலீசார் சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்துகிடந்த நபர் மீது காயங்கள் இருந்ததால் போலீசார் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்தனர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவின் பேரில் விருதம்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் ஆதர்ஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் இறந்து கிடந்தவர் பிரம்மபுரம் பகுதியை சேர்ந்த மண்ணாண்டி (வயது 52) என தெரியவந்தது. 

அடித்துக்கொலை

அவருடைய மரணத்துக்கான காரணம் குறித்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர் ஒருவர், இறந்து போன மண்ணாண்டியை பாட்டில் மற்றும் கல்லால் தாக்கி கொலை செய்து, பிணத்தை அந்த பகுதியில் உள்ள ரோட்டில் இழுத்து வந்து போட்டு விட்டு செல்வது போல் பதிவாகி இருந்தது.

அதைத்தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் மண்ணாண்டியை கொலை செய்தது பிரம்மபுரம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த சக்திவேல் என்ற அதிலோ என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் வேகமாக செல்லும்போது மண்ணாண்டிக்கும், சக்திவேலுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. 
இதனால் மண்ணாண்டியை கொலை செய்துள்ளார். பின்பு வாகன விபத்தில் இறந்தது போன்ற நாடகத்தை ஏற்படுத்தி சென்று விட்டதாக போலீசாரிடம் அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு

இந்த வழக்கை திறமையாக கையாண்டு இறந்து போன நபர் யார், குற்றவாளி மற்றும் இறப்பிற்கான காரணம் ஆகியவற்றை கண்டுபிடித்த தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார்  சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

Next Story