விருதுநகர்,
விருதுநகரில் குடும்ப வறுமை காரணமாக கல்லூரியில் சேர்ந்து படிக்க முடியாத விரக்தியில் மாணவி தூக்குப்போட்டு கொண்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
குடும்ப வறுமை
விருதுநகர் அல்லம்பட்டி சுந்தரம் தெருவை சேர்ந்தவர் வேல்ராஜ்(வயது 55) இவருடைய மகள் அமிர்தலட்சுமி (வயது 18). அங்குள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு முடித்த அமிர்த லட்சுமி நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.
இந்த நிலையில் இவருக்கு குடும்ப வறுமை காரணமாக கல்லூரியில் படிக்க முடியாத சூழ்நிலை இருந்தது. இதனால் தனது சுய சம்பாத்தியத்தில் கல்லூரியில் படிக்க வேண்டும் என்பதற்காக அமிர்தலட்சுமி கடந்த 2 மாதங்களாக ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார்.
தற்கொலை
ஆனாலும் போதிய பணம் கிடைக்காததால் கல்லூரியில் சேர்ந்து படிக்க முடியாதோ என கவலைப்பட்டார். இதனால் மனவிரக்தியில் இருந்த அமிர்தலட்சுமி சம்பவத்தன்று வீட்டு சமையல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை வேல்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குடும்ப வறுமை காரணமாக கல்லூரி படிப்பை படிக்க முடியாத விரக்தியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.