போக்குவரத்து துறை சார்பில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
பள்ளி வாகனங்களில் உரிய பாதுகாப்பு வசதி இருக்கிறதா? -போக்குவரத்துத்துறை சார்பில் ஆய்வு
மதுரை
போக்குவரத்து துறை சார்பில் பள்ளி வாகனங்கள் நேற்று ஆய்வு செய்யப்பட்டன. அதில் கலெக்டர் அனிஷ்சேகர் பங்கேற்றார்.
100 வாகனங்கள்
ஒவ்வொரு ஆண்டு பள்ளி தொடங்குவதற்கு முன்பு போக்குவரத்து துறை சார்பில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழ் பெற்ற வாகனங்கள் மட்டுமே இயக்க வேண்டும். கொரோனா பரவல் காரணமாக தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டு தற்போது தான் திறக்கப்பட்டு உள்ளன. இருப்பினும் பெரும்பாலான பள்ளிகளில் வாகன வசதி செய்து தரப்படவில்லை. மதுரை மாவட்டத்தில் மொத்தம் 986 பள்ளி வாகனங்கள் உள்ளன. தற்போது 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை மட்டுமே செயல்படுவதால் 250 வாகனங்கள் மட்டுமே இயக்க சான்றிதழுக்கு விண்ணப்பம் செய்து உள்ளன.
எனவே விண்ணப்பம் செய்து இருந்த பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி மதுரை ரிசர்வ் லைன் மைதானத்தில் நேற்று நடந்தது. மொத்தம் 100 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. கலெக்டர் அனிஷ் சேகர் தலைமை தாங்கி ஆய்வு செய்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கலந்து கொண்டார். இந்த ஆய்வின் போது தகுதி பெற்ற வாகனங்களில் அனுமதிக்கான வில்லைகள் ஒட்டப்பட்டன.
50 சதவீத மாணவர்கள்
அதன்பின் கலெக்டர் அனிஷ் சேகர் கூறியதாவது:-
மதுரை மாவட்டத்தில் அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் தொடங்கப்பட்டு உள்ளன. மாணவர்களின் பாதுகாப்பினை கருதி பள்ளிப் பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டு பாதுகாப்பு குழு மூலம் உறுதி தன்மை ஆய்வு செய்யப்படுகின்றன. அதில் தகுதியான வாகனங்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. தகுதியில்லாத வாகனங்களை இயங்க கூடாது. அரசு பஸ்களில் தனி மனித இடைவெளியை கடைபிடிப்பதற்காக 50 சதவீத பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. அதே போல் பள்ளி வாகனங்களிலும் 50 சதவீத மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத மற்ற பணியாளர்கள் அனைவருக்கும் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதற்கான எந்த அறிகுறிகளும் கண்டறியப்படவில்லை.
தடுப்பூசி
அனைத்து கல்லூரிகளிலும் மாணவ-மாணவிகள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே கல்லூரிக்குள் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். இரண்டாம் தவணை செலுத்தி இருக்க வேண்டியதில்லை. மேலும், அனைத்து கல்லூரிகளிலும் கொரோனா சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று (நேற்று முன் தினம்) மட்டும் ஒரே நாளில் 3 ஆயிரம் கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. அனைத்து கல்லூரிகளிலும் போதுமான தடுப்பூசி கையிருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story