மைசூருவில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம்; கல்லூரி மாணவியை கற்பழிக்க முயன்ற நண்பர்
மைசூருவில் கல்லூரி மாணவியை கற்பழிக்க முயன்ற அவருடைய நண்பரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
மைசூரு:
21 வயது இளம்பெண்
மைசூரு சாமுண்டி மலை அடிவாரத்தில் கடந்த சில நாட்களுக்கு காதலனுடன் சென்ற ஒரு இளம்பெண்ணை 7 பேர் கும்பல் கற்பழித்தனர். இந்த சம்பவம் கர்நாடகத்தையே உலுக்கியது. இந்த நிலையில் மைசூருவில் அதேபோல் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. இந்த முறை தனது தோழியையே வாலிபர் ஒருவர் கற்பழிக்க முயன்ற சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-
மைசூரு என்.ஆர்.மொகல்லா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் 21 வயது இளம்பெண். இவர் மைசூருவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியி படித்து வருகிறார். இவரும், இவருடன் படித்து வரும் ஒரு வாலிபரும் நட்பாக பழகி வந்தனர். மேலும் என்.ஆர்.மொகல்லா பகுதியில் உள்ள ஒரு தனியார் படிப்பகத்துக்கு சென்று அடிக்கடி இருவரும் சென்று படித்து வந்தனர்.
கற்பழிக்க முயற்சி
அதேபோல் நேற்று மாலையும் இருவரும் அந்த படிப்பகத்துக்கு சென்று படித்துக் கொண்டிருந்தனர். மாலை நேரம் வந்ததும் அங்கிருந்த அனைவரும் சென்றுவிட்டனர். ஆனால் அந்த இளம்பெண்ணும், வாலிபரும் மட்டும் அங்கு தனியாக இருந்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட அந்த வாலிபர், திடீரென தனது தோழியான இளம்பெண்ணை கற்பழிக்க முயன்று பாலியல் தொல்லை கொடுத்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் கூச்சலிட்டார். அப்போது அந்த வாலிபர், இளம்பெண்ணை சரமாரியாக தாக்கி கற்பழிக்க முயன்றார்.
வாலிபர் பிடிபட்டார்
அதற்குள் அப்பகுதி மக்கள் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் வருவதைப் பார்த்த அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து அப்பகுதி மக்கள் அந்த இளம்பெண்ணை மீட்டனர். பின்னர் அவர்கள் இதுபற்றி என்.ஆர்.மொகல்லா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு ஔப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை பிடித்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் மைசூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story