காட்டுப்பன்றியை வேட்டையாடிய 7 பேர் கைது
புளியங்குடியில் காட்டுப்பன்றியை வேட்டையாடிய 7 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
புளியங்குடி:
புளியங்குடியில், காட்டுப்பன்றியை வேட்டையாடிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். காட்டெருமையை கொன்ற தந்தை, மகனும் சிக்கினர்.
நாய்கள் மூலம் வேட்டை
தென்காசி மாவட்டம் புளியங்குடி வனச்சரகம் டி.என்.புதுக்குடி பீட் பகுதியில் வேட்டை நாய்களை கொண்டு காட்டுப்பன்றிகளை சிலர் வேட்டையாடுவதாக புளியங்குடி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து புளியங்குடி வனச்சரக அலுவலர் ஸ்டாலின், வனவர் அசோக்குமார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு புளியங்குடியைச் சேர்ந்த சசிகுமார் (வயது 28), ஜெகதீஸ்வரன் (22), பிரபாகரன் (21), நாகர்ஜுனன் (25), காமேஷ் (27), ஆகாஷ் (21), ரமேஷ் (21) ஆகிய 7 பேர் வேட்டை நாய்களை கொண்டு காட்டுப்பன்றிகளை வேட்டையாடி அதன் இறைச்சியை சமைத்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து 7 பேரையும் வனத்துறையினர் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 7 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
காட்டெருமை
இதேபோன்று டி.என்.புதுக்குடி லெப்பசாபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் முகம்மது நாகூர், அவரது மகன் அப்துல் வகாப் ஆகியோர் தங்களுக்கு சொந்தமான காய்கறி தோட்டத்தை சுற்றிலும் இரும்பு கம்பியினாலான மின்வேலி அமைத்துள்ளனர். அதில் திருட்டுத்தனமாக மின்சாரம் பாய்ச்சி காட்டெருமை ஒன்றினை கொன்று அதன் இறைச்சியை விற்பனைக்கு எடுத்துவிட்டு மீதமுள்ள தலை, கால் மற்றும் எலும்பு பாகங்களை அருகில் உள்ள ஓடைப்பகுதியில் ஆங்காங்கே வீசி உள்ளதாக புளியங்குடி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து புளியங்குடி வனச்சரக அலுவலர் ஸ்டாலின் தலைமையில் வனவர் அசோக்குமார், வனக்காப்பாளர்கள் பாரதி, யோபுராஜா அடங்கிய தனிக்குழுவினர் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தனர். அங்கு கிடந்த காட்டெருமை உடல் பாகங்களை கைப்பற்றினர்.
கைது
நெல்லை கால்நடை மருத்துவ கல்லூரியைச் சேர்ந்த சிறப்பு குழுவினரும் சம்பவ இடத்தில் ஆராய்ந்து, காட்டெருமையின் உடல் பாகங்களின் மாதிரிகளை சேகரித்து சென்றனர். இதுகுறித்து தோட்டத்தின் உரிமையாளர் முகம்மது நாகூர் மற்றும் அவரது மகன் அப்துல் வகாப் ஆகியோரை வனத்துறையினர் கைது செய்து சிவகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மேலும் நாகராஜ் என்பவரை தேடி வருகின்றனர்.
வனத்துறை வேண்டுகோள்
காட்டெருமை வனஉயிரின சட்டத்தின்கீழ் பாதுகாக்கப்படும் முக்கிய வனவிலங்கு ஆகும். விவசாயிகள் இதுபோன்று மின்வேலி அமைப்பது வனஉயிரின பாதுகாப்பு சட்டத்திற்கு புறம்பான செயலாகும்.
எனவே, வனவிலங்குளால் ஏதேனும் தொல்லை ஏற்பட்டால் அதனை தடுக்கவும், விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்கவும் வனத்துறை எப்பொழுதும் உறுதுணையாக இருக்கும். வனத்துறைக்கு உரிய நேரத்தில் தகவல் கொடுக்க வேண்டுமே தவிர இதுபோன்ற குற்றச்செயல்களில் பொதுமக்கள் யாரும் ஈடுபடக்கூடாது என வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story