விருதுநகர்,
ராஜபாளையம் மற்றும் அருப்புக்கோட்டை பகுதிகளில் செல்போன் மற்றும் இருசக்கர வாகனங்கள் திருடு போனது தொடர்பாக குற்றவாளிகளை பிடிப்பதற்கு சேத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் சக்தி குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீஸ் ஏட்டு கோபால் இளங்கோவன் ஆகியோர் அடங்கிய தனிப்படையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் அமைத்து உத்தரவிட்டார். தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு ராஜபாளையம் துரைசாமிபுரத்தை சேர்ந்த அருண்குமார் (வயது 20), புதுத்தெருவைச் சேர்ந்த சுந்தர்ராஜ் (20) ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ராஜபாளையம் அருப்புக்கோட்டை பகுதிகளில் திருடிய இருசக்கர வாகனங்கள் மற்றும் செல்போனை மீட்டனர்.