கைதி சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் சாலை மறியல்


கைதி சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 3 Sep 2021 8:38 PM GMT (Updated: 2021-09-04T02:08:50+05:30)

சுரண்டை அருகே கைதி சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் சாலை மறியல் செய்தனர்.

சுரண்டை:
சுரண்டை அருகே கைதி சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கைதி சாவு

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே நடுவக்குறிச்சியைச் சேர்ந்தவர் தங்க பாண்டியன். இவருடைய மகன் கட்டிசாமி (வயது 32). இவர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தனியார் தங்கும் விடுதியில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கு காளியம்மாள் என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்டிசாமியை குற்ற வழக்கில் போலீசார் கைது செய்து, அவிநாசி சிறையில் அடைத்தனர். அங்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு கட்டிசாமிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
உடனே அவரை அவினாசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

உறவினர்கள் சாலைமறியல்

இதற்கிடையே கட்டிசாமியின் சாவில் மர்மம் இருப்பதாகவும், இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும், அவரது சொந்த ஊரான சுரண்டை அருகே நடுவக்குறிச்சியில் உறவினர்கள், கிராம மக்கள் நேற்று மதியம் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உடனே புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன், கடையநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சேர்ந்தமரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல் பாண்டியன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சாலைமறியலை கைவிட்ட உறவினர்கள், தொடர்ந்து சாலையோரமாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூரிலும் போராட்டம்

இதற்கிடையே திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியிலும் கட்டிசாமியின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரது உடலை வாங்க மறுத்தும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்டிசாமியின் மனைவிக்கு அரசு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அவர்களிடம் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தொடர்ந்து அவினாசி மாஜிஸ்திரேட்டு விபிசி முன்னிலையில் கட்டிசாமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவரது உடலை உறவினர்கள் பெற்று ெசன்றனர்.

Next Story