பள்ளி மாணவிகள் 2 பேருக்கு கொரோனா


பள்ளி மாணவிகள் 2 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 3 Sep 2021 8:38 PM GMT (Updated: 2021-09-04T02:08:59+05:30)

பள்ளி மாணவிகள் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அரியலூர்:

பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. தற்போது தொற்று பரவல் குறைந்த நிலையில், 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு கடந்த 1-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. 
பள்ளிகளுக்கு வரும் மாணவ-மாணவிகளுக்கு கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வழங்கப்பட்டு, தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஒரே வகுப்பறையில் 20 மாணவ, மாணவிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். இதன்படி அரியலூர் மாவட்டத்திலும் கடந்த 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு, மாணவ, மாணவிகள் வந்தனர்.
கொரோனா தொற்று
இந்நிலையில் அரியலூரில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு கடந்த 1-ந்தேதி லேசான காய்ச்சல் இருந்துள்ளது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் பள்ளியில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. நேற்று வந்த பரிசோதனை முடிவில் அந்த மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த மாணவி பள்ளிக்கு வரவில்லை.
மேலும் அவருடன் 9-ம் வகுப்பில் படிக்கும் மற்ற மாணவிகளுக்கு நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதற்கான முடிவுகள் விரைவில் தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டது.
மற்றொரு மாணவி
இதேபோல் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சிலால் கிராமத்தை சேர்ந்த ஒரு மாணவி, வரதராஜன்பேட்டை அருகே தென்னூரில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். அந்த பள்ளியின் விடுதியில் சேருவதற்காக கடந்த 1-ந் தேதி அந்த மாணவி ஜெயங்கொண்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்துவிட்டு, அன்று பள்ளிக்கு சென்று விட்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பரிசோதனை முடிவில் அந்த மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவ குழுவினர் அந்த மாணவியை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து, சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஆசிரியைகளுக்கு பரிசோதனை
மேலும் அந்த மாணவியுடன் படிக்கும் மற்ற மாணவிகளுக்கும், அந்த மாணவியுடன் பஸ்சில் பயணம் செய்த 4 ஆசிரியைகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறக்கப்பட்டு 3 நாட்களே ஆன நிலையில் 2 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
வகுப்புகள் தொடர்ந்து நடந்தன
அரியலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவிகள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளபோதும், பள்ளிகளில் அந்த மாணவிகள் பயிலும் வகுப்புகள் மற்றும் மற்ற வகுப்புகளும் தொடர்ந்து நடைபெற்றன. மேலும் தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவிகளுடன் படிக்கும் மாணவிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, அதற்கான முடிவுகள் வரும்வரை அவர்கள் பள்ளிக்கு வராமல் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
ஆனால் கடந்த ஜனவரி மாதத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்றபோது, சில பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த மாணவ, மாணவிகள் பயின்ற வகுப்பறைகளும், சில இடங்களில் பள்ளிகளும் மூடப்பட்டன. பின்னர் வகுப்பறை மற்றும் பள்ளி வளாகங்களில் கிருமி நாசினி தெளிப்பது போன்ற தூய்மை பணிகள் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து சில பள்ளிகள் திறக்கப்பட்டன. பின்னர் கொரோனா தொற்று பரவல் அதிகரித்த நிலையில் அனைத்து பள்ளிகளும் மீண்டும் மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story