இடி, மின்னலுடன் பலத்த மழை


இடி, மின்னலுடன் பலத்த மழை
x
தினத்தந்தி 3 Sep 2021 8:39 PM GMT (Updated: 3 Sep 2021 8:39 PM GMT)

ஜெயங்கொண்டத்தில் 2-வது நாளாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

ஜெயங்கொண்டம்:

பலத்த மழை
தமிழகத்தில் வளிமண்டல காற்றழுத்தம் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் சமீபத்தில் அறிவித்திருந்தது. ஆனால் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ஜெயங்கொண்டம் பகுதியில் பலத்த மழை பெய்தது. இருப்பினும் நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மதிய நேரத்தில் வெப்பம் குறைந்து லேசாக குளிர்ந்த காற்று வீசியது.
இதையடுத்து மாலை நேரத்தில் தீடீரென மழை பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி, மின்னல், காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. மேலும் திருச்சி சாலை, சிதம்பரம் சாலை, கும்பகோணம் சாலை, விருத்தாச்சலம் சாலை உள்ளிட்ட சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த மழையின் காரணமாக எதிரே வரும் வாகனம் தெரியாமல், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.
வாகன ஓட்டிகள் சிரமம்
ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை முன்பாக கும்பகோணம் சாலையில் மழை பெய்தாலே எப்போது தண்ணீர் தேங்கி நிற்கும். அதன்படி தற்போது மழைநீர் தேங்கி நிற்பதால், இன்னும் 3 நாட்களுக்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமப்பட வேண்டிய நிலை ஏற்படும். கும்பகோணம் சாலையில் இரண்டு புறமும் வடிகால் வாய்க்கால்கள் இல்லாததே இதற்கு காரணம் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கூறுகின்றனர். எனவே வடிகால் வாய்க்கால் அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் சாலையில் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் அனைத்தும் மெதுவாகவே இயக்கப்பட்டன. நேற்று முன்தினம் பெய்த மழையைவிட நேற்று பலத்த மழை பெய்ததால், சாலை ஓரங்களில் மற்றும் நீர்வரத்து வாய்க்கால்களில் ஓடிய மழை வெள்ளம் ஏரி, குளங்கள், குட்டைகளில் நிரம்பின. மேலும் இன்னும் 10 நாட்களுக்குள் கடலை பயிர்செய்த விவசாயிகள், அறுவடை செய்ய உள்ள நிலையில் இந்த மழை கடலையை முற்றவிடாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் கடலை விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

Next Story