ஒரேநாளில், சில மணிநேர இடைவெளியில் அடுத்தடுத்து 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட தொழிலாளி


ஒரேநாளில், சில மணிநேர இடைவெளியில் அடுத்தடுத்து 2 டோஸ் தடுப்பூசி  போட்டுக்கொண்ட தொழிலாளி
x
தினத்தந்தி 3 Sep 2021 9:04 PM GMT (Updated: 3 Sep 2021 9:04 PM GMT)

சுள்ளியாவில், ஒரேநாளில் சில மணிநேர இடைவெளியில் தொழிலாளி ஒருவர் அடுத்தடுத்து 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெங்களூரு:

தொழிலாளி

  தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா கூடலு கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்(வயது 19). கூலி தொழிலாளியான இவர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள முடிவு செய்தார். இதற்காக அவர் நேற்று முன்தினம் சுள்ளியா டவுன் துக்கலடுக்காவில் அமைந்துள்ள ஒரு உயர் நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசி முகாமுக்கு சென்றார். இதையடுத்து அங்கிருந்த மருத்துவ பெண் ஊழியர் ஒருவர், அருணுக்கு முதலாவது டோஸ் தடுப்பூசியை போட்டார். அதையடுத்து அவர் அங்குள்ள வளாகத்தில் சிறிது நேரம் அமர்ந்திருந்தார்.

  அந்த சந்தர்ப்பத்தில் அங்கு வந்த மருத்துவ பெண் ஊழியர், அருணுக்கு முதல் டோஸ் தடுப்பூசி போட்டதை மறந்து மீண்டும் அவருக்கு தடுப்பூசியை போட்டுவிட்டார். அப்போதுதான் தனக்கு ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டு விட்டதாக அருண் கூறினார். இதன்காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உடல்நிலை கண்காணிப்பு

  இதனால் பதற்றம் அடைந்த அந்த மருத்துவ பெண் ஊழியர், உடனடியாக இதுபற்றி அங்கிருந்த டாக்டர்களிடம் தெரிவித்தார். அவர்கள், அருணை மீட்டு சுமார் 3 மணி நேரம் கண்காணிப்பு பிரிவில் வைத்திருந்தனர். அதன்பிறகு அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். நேற்று அவரது அவரது வீட்டிற்கு சென்று மருத்துவ ஊழியர்கள் அருணின் உடல்நிலையை பரிசோதித்தனர். அப்போது அவருக்கு எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்தினர்.

  இதுபற்றி சுள்ளிய தாலுகா சுகாதார துறை அதிகாரி டாக்டர் நந்தகுமார் கூறுகையில், ‘‘அருணுக்கு ஏற்கனவே தடுப்பூசி போட்டுவிட்டதை மறந்து அவருக்கு மீண்டும் தடுப்பூசியை பெண் மருத்துவ ஊழியர் போட்டுவிட்டார். தடுப்பூசி போட்டவுடன் அந்த அறையை விட்டு வெளியேறாமல் அருண் அங்கேயே சுற்றித்திரிந்ததால் ஏற்பட்ட குழப்பம் காரணமாக அவருக்கு மீண்டும் தடுப்பூசியை பெண் மருத்துவ ஊழியர் செலுத்திவிட்டார். அருணின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்’’ என்று கூறினார்.

தமிழகத்தில்...

  ஏற்கனவே தமிழகத்தில் இதேபோல் ஒரு மூதாட்டிக்கு அடுத்தடுத்து 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் அந்த மூதாட்டியை ஆஸ்பத்திரியில் சேர்த்து டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்தனர். அதேபோல் ஒரு சம்பவம் கர்நாடகத்தில் ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story