மைசூரு தசரா விழா அக்டோபர் 7-ந் தேதி தொடக்கம்; பசவராஜ் பொம்மை தலைமையில் நடந்த உயர்மட்ட கூட்டத்தில் முடிவு


மைசூரு தசரா விழா அக்டோபர் 7-ந் தேதி தொடக்கம்; பசவராஜ் பொம்மை தலைமையில் நடந்த உயர்மட்ட கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 4 Sept 2021 2:39 AM IST (Updated: 4 Sept 2021 2:39 AM IST)
t-max-icont-min-icon

வரலாற்று சிறப்புமிக்க மைசூரு தசரா விழா எளிமையாக கொண்டாடப்பட உள்ளது. அக்டோபர் 7-ந் தேதி தசரா விழா தொடங்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் நடந்த உயர்மட்ட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு:

மைசூரு தசரா விழா

  மைசூரு மாவட்டத்தில் ஆண்டு தோறும் விஜயதசமியையொட்டி வரலாற்று சிறப்பு மிக்க மைசூரு தசரா விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியாக 10-ம் நாள் ஜம்பு சவாரி ஊர்வலமும் நடைபெறுவது வழக்கம். இதில் தங்க அம்பாரியில் வீற்றிருக்கும் சாமுண்டீஸ்வரி அம்மனை சுமந்து செல்லும் யானை ராஜநடைபோட அதன் பின்னால் மற்ற யானைகளும், அலங்கார ஊர்திகளும், பல்வேறு கலைக்குழுவினரும் அணிவகுத்து செல்வார்கள். இது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இந்த நிகழ்வில் வெளிமாநிலம், வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள். இதனால் மைசூரு தசரா விழா உலக அளவில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த மைசூரு தசரா விழா கொரோனா காரணமாக கடந்த ஆண்டு (2020) எளிமையாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டு மைசூரு தசரா விழா கொண்டாடுவது குறித்து பெங்களூரு விதானசவுதாவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் உயர்மட்ட குழு கூட்டத்தில் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது.

  இந்த ஆலோசனை கூட்டத்தில் மைசூரு மாவட்ட பொறுப்பு மந்திரி சோமசேகர், மைசூரு, மண்டியா, சாம்ராஜ்நகர் மாவட்ட எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மேல்-சபை உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டார்கள். கூட்டத்தில் கொரோனா பாதிப்பு இருப்பதாலும், 3-வது அலை அக்டோபர் முதல் வாரம் உருவாக வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்து இருப்பதாலும், மைசூரு தசரா விழாவை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

எளிமையாக கொண்டாட முடிவு

  குறிப்பாக தசரா விழாவை தொடங்கி வைக்க சிறப்பு விருந்தினராக யாரை அழைக்கலாம் என்பது குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஆலோசனை நடத்தினாா்கள். கொரோனா காரணமாக இந்த ஆண்டும் மைசூரு தசரா விழாவை எளிமையாக நடத்த வேண்டும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தனது விருப்பத்தை தெரிவித்தார். இதற்கு கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் பிரதிநிதிகளும் சம்மதம் தெரிவித்தார்கள்.

  அதே நேரத்தில் கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு, தற்போது எந்தவொரு இறுதி முடிவும் எடுக்க வேண்டாம் என்றும், தற்காலிகமாக மைசூரு தசரா விழாவை எளிமையாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வோம் என்றும், வருகிற 20-ந்தேதிக்கு பின்பு மீண்டும் உயர்மட்ட அளவில் ஒரு ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுக்கலாம் என்றும், இதற்கான முழு அதிகாரத்தை முதல்-மந்திரிக்கு வழங்கியும் முடிவு எடுக்கப்பட்டது.
  இந்தகூட்டம் முடிந்ததும் மந்திரி சோமசேகர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அக்டோபர் 7-ந் தேதி தொடக்கம்

  வரலாற்று சிறப்புமிக்க தசரா விழாவை கொண்டாடுவது குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் நடந்த உயர்மட்ட குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கொரோனா காரணமாக கடந்த ஆண்டை (2020) போல, இந்த ஆண்டும் மைசூரு தசரா விழாவை எளிமையாக கொண்டாடுவதற்கு முதல்-மந்திரி உள்பட கூட்டத்தில் பங்கேற்ற அனைவருடனும் ஆலோசித்து ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

  அதன்படி, புகழ்பெற்ற மைசூரு தசரா விழா அக்டோபர் மாதம் 7-ந் தேதி தொடங்கி 15-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது. தசரா தொடக்க விழா மைசூரு சாமுண்டிமலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில்அக்டோபர் 7-ந் தேதி காலை 8.15 மணியில் இருந்து 8.45 மணிவரை நடைபெற இருக்கிறது. அக்டோபர் 15-ந் தேதி ஜம்பு சவாரி ஊர்வலம் நடக்கும். அன்றைய தினம் மதியம் 2.45 மணியில் இருந்து 3.15 மணியளவில் ஜம்பு சவாரி ஊர்வலம் தொடங்கப்படும்.

மீண்டும் ஒரு ஆலோசனை

  ஒவ்வொரு ஆண்டை போல இந்த ஆண்டும் மைசூரு தசரா விழாவை வெற்றிகரமாக நடத்தி முடிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும். கடந்த ஆண்டு தசரா தொடக்க விழாவில் 150 பேர் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். ஜம்பு சவாரி ஊர்வலத்தில் 300 பேர் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். அதுபோல், இந்த ஆண்டும் தொடக்க விழாவில் 150 பேரும், ஜம்பு சவாரி ஊர்வலத்தில் 300 பேர் கலந்து கொள்ளவும் அனுமதிக்கப்படுவார்கள்.

  இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் இறுதியானது அல்ல. கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு வருகிற 20-ந் தேதிக்கு பின்பு மீண்டும் ஒரு ஆலோசனை கூட்டம் நடைபெறும். அப்போது மைசூரு தொடக்க விழாவை தொடங்கி வைப்பது யார்?, விழாவில் எந்த மாதிரியான நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்கலாம் என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

ரூ.6 கோடி ஒதுக்கீடு

  கொரோனா தற்போது குறைந்து வருவதால் மைசூரு பொறுப்பு மந்திரி என்ற வகையில், கடந்த ஆண்டை விட தொடக்க மற்றும் ஜம்பு சவாரி ஊர்வலத்தில் இருமடங்கு பேர் கலந்து கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று முதல்-மந்திரியிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். மைசூரு தசரா விழா கொண்டாட்டம் தொடர்பான இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு வழங்கப்பட்டுள்ளது. அவரே தொடக்க விழாவை தொடங்கி வைக்க யாரை அழைப்பது என்று முடிவு எடுப்பார்.

  கடந்த முறை தசரா விழாவுக்கான செலவு ரூ.8 கோடியே 9 லட்சத்திற்கான பாக்கி தொகையை வழங்க முதல்-மந்திரி வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த ஆண்டு தசரா விழா கொண்டாட்டத்திற்கு ரூ.5 கோடி வழங்கும்படி கோரிக்கை விடுத்தேன். ஆனால் ரூ.1 கோடி கூடுதலாக வழங்கி, அதாவது மைசூரு தசரா விழா கொண்டாட்டத்திற்காக ரூ.6 கோடியை ஒதுக்கீடு செய்ய முதல்-மந்திரி அனுமதி வழங்கி உள்ளார்.

கொரோனா விதிமுறைகள்...

  மைசூரு தசரா விழா கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள்படி எளிமையாக கொண்டாடப்படும். கொரோனா விதிமுறைகளை மீறாத வண்ணம் தசரா விழாவை கொண்டாடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். தசரா விழா கொண்டாட்டம் குறித்து மைசூரு பொறுப்பு மந்திரியான எனது தலைமையில் மீண்டும் ஒரு ஆலோசனை கூட்டம் நடைபெறும்.

  மைசூரு தசரா என்றாலே கண்கவர் மின்விளக்குகள் அலங்காரம் தான். இந்த ஆண்டும் கண்கவர் மின்விளக்கு அலங்காரம் செய்து கொடுப்பதாக மின்சாரத்துறை மந்திரி உறுதி அளித்துள்ளார். அதன்படி, மின்சார துறையினர் மைசூரு அரண்மனையை சுற்றி உள்ள பகுதிகளில் மின் விளக்கு அலங்காரங்களை மிகவும் சிறப்பாக செய்து கொடுக்க உள்ளனர்.
  இவ்வாறு சோமசேகர் கூறினார்.

Next Story