ஆசிரியர் பயிற்சி மாணவிகள் 2-வது நாளாக போராட்டம்


ஆசிரியர் பயிற்சி மாணவிகள் 2-வது நாளாக போராட்டம்
x
தினத்தந்தி 4 Sept 2021 3:45 AM IST (Updated: 4 Sept 2021 3:45 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் ஆசிரியர் பயிற்சி மாணவிகள் 2-வது நாளாக தேர்வை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். மேலும் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

நாகர்கோவில்:
நாகர்கோவிலில் ஆசிரியர் பயிற்சி மாணவிகள் 2-வது நாளாக தேர்வை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். மேலும் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். 

தேர்வு புறக்கணிப்பு

தமிழகம் முழுவதும் ஆசிரியர் பட்டய பயிற்சி மாணவர்களுக்கு நேற்று முன்தினம் பொதுத் தேர்வு தொடங்கியது. இந்த தேர்வு 14 நாட்கள் நடைபெறுகிறது. நாகர்கோவில் கோட்டாரில் உள்ள ஒரு தனியார்  பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கொரோனா காலக் கட்டத்தில் தொடர்ந்து 14 நாட்கள் நேரடியாக சென்று மையங்களில் தேர்வு எழுதுவதால் உயிருக்கு     ஆபத்து    ஏற்ப டும். எனவே, தேர்வை ஆன்லைன் வழியாக நடத்த வேண்டும். கடந்த 3 ஆண்டுகளாக தேர்வுக்கான மதிப்பெண் மதிப்பிடுவதில் குளறுபடி ஏற்பட்டு, ஏராளமான மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி நேற்று முன்தினம் தேர்வை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
நேற்று 2-வது நாளாக தேர்வு தொடங்கியதும், சுமார் 70-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்மிபாட்டு பாடி ஆர்ப்பாட்டம்

தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் எதிரே சென்று தங்களது கோரிக்கைகளை கும்மி பாட்டாக பாடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர், அனைவரும் கும்பலாக மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகம் உள்ளே நுழைய முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். மனு அளிக்க 3 பேர் மட்டுமே கலெக்டர் அலுவலகம் உள்ளே செல்ல அனுமதிக்கப்படும் என போலீசார் கூறினர்.
இதைதொடர்ந்து மாணவர்கள் 3 பேர் மட்டும் கலெக்டர் அலுவலகத்தின் உள்ளே சென்று கோரிக்கை மனு அளித்தனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.
இதற்கிடையே முதலாம் ஆண்டு மாணவர்கள் சிலர் தேர்வை புறக்கணிக்காமல் தேர்வு எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story