லேம்ஸ்ராக், டால்பின்நோஸ் காட்சிமுனைகள் திறப்பு


லேம்ஸ்ராக், டால்பின்நோஸ் காட்சிமுனைகள் திறப்பு
x
தினத்தந்தி 4 Sept 2021 10:21 AM IST (Updated: 4 Sept 2021 10:21 AM IST)
t-max-icont-min-icon

குன்னூரில் லேம்ஸ்ராக், டால்பின்நோஸ் காட்சிமுனைகள் திறக்கப்பட்டு உள்ளது. அங்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருக்கிறது.

குன்னூர்

குன்னூரில் லேம்ஸ்ராக், டால்பின்நோஸ் காட்சிமுனைகள் திறக்கப்பட்டு உள்ளது. அங்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருக்கிறது.

காட்சிமுனைகள்

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் லேம்ஸ்ராக், டால்பின்நோஸ் ஆகிய காட்சிமுனைகள் உள்ளன. இதில் லேம்ஸ்ராக் காட்சிமுனை குன்னூரில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரத்திலும், டால்பின் நோஸ் காட்சிமுனை 12 கிலோ மீட்டர் தூரத்திலும் அமைந்து உள்ளது. இவை வனத்துறையின் கட்டுபாட்டில் உள்ளன. 

லேம்ஸ்ராக் காட்சி முனையில் இருந்து பக்காசூரன் மலை, குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை ஆகியவற்றை கண்டு ரசிக்க முடியும். டால்பின்நோஸ் காட்சிமுனையில் இருந்து மலை உச்சியில் இருந்து வெள்ளியை உருக்கி ஊற்றுவது போன்று தண்ணீர் விழுவதை காணலாம். மேலும் மேட்டுப்பாளையம், சிறுமுகை, பவானி ஆறு போன்ற சமவெளி பகுதிகளை கண்டு ரசிக்கலாம். 

இதமான காலநிலை

இதனால் அந்த காட்சி முனைகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வந்தனர். ஆனால் கொரோனா பரவல் காரணமாக லேம்ஸ்ராக் மற்றும் டால்பின்நோஸ் காட்சிமுனைகள் மூடப்பட்டு இருந்தன. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால், அவை திறக்கப்பட்டு உள்ளது.

 இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. நீலகிரியில் 2-வது சீசன் தொடங்கி உள்ளதால், இதமான காலநிலை நிலவுகிறது. இதை அனுபவித்தபடி இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து செல்கின்றனர்.


Next Story