மேலும் 600 கடைகளை திறக்க அனுமதி


மேலும் 600 கடைகளை திறக்க அனுமதி
x
தினத்தந்தி 4 Sept 2021 10:28 AM IST (Updated: 4 Sept 2021 10:28 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் மேலும் 600 கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.

ஊட்டி

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் மேலும் 600 கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.

நிலுவை வாடகை

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டின் உள் மற்றும் வெளிப்புற வணிக வளாகங்களில் மொத்தம் 1,587 கடைகள் உள்ளது. இங்கு வாடகை செலுத்தாத 750 கடைகளுக்கு கடந்த மாதம் 25-ந் தேதி நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். 

அங்கு கடந்த 9 நாட்களாக ரேஷன் கடைகள் உள்ளிட்ட சில கடைகளை தவிர பிற அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன. மேலும் கடைகளுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி வியாபாரிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதற்கிடையில் நிலுவை வாடகையை வியாபாரிகள் செலுத்தி வருகின்றனர். வாடகை செலுத்திய வியாபாரிகளின் கடைகளுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டு வருகிறது. இதுவரை சீல் வைத்த 50 கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. 

காய்கறி, பழ கடைகள்

இந்த நிலையில் குறைந்த வாடகை பாக்கி உள்ள கடைகள் நேற்று முதல் திறக்க அனுமதிப்பட்டது. ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் 9 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் காய்கறி, பழ கடைகள் திறக்கப்பட்டு இருந்தது. காலையில் மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது. மதியத்திற்கு பிறகு மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இருப்பினும் மார்க்கெட்டுக்குள் காய்கறிகள் ஏலம் நடைபெறவில்லை. 

இதுகுறித்து நகராட்சி வருவாய் அலுவலர் பால்ராஜ் கூறும்போது, ஊட்டி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவை வாடகையை செலுத்தியதால் சீல் வைத்த 50 கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டது. காய்கறி, பழக்கடைகள் என குறைவான நிலுவை தொகை உள்ள 600 கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் படிப்படியாக நிலுவை தொகையை செலுத்தி வருகின்றனர். அதிக நிலுவை தொகை உள்ள 100 கடைகளை திறக்க அனுமதி இல்லை என்றார்.


Next Story