திருப்பூர் மாவட்டத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலைகைள் வைக்க தடை
திருப்பூர் மாவட்டத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலைகைள் வைக்க தடை
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலைகைள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் சட்டப்பூர்வ நடவடிக்கை என கலெக்டர் வினீத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தி விழா
திருப்பூர் மாவட்டத்தில் கொண்டாடப்பட உள்ள சமய விழாக்களின் போது கடைபிடிக்க வேண்டிய அரசின் கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் வினீத் தலைமை தாங்கி பேசியதாவது:-
கொரோனா நோய் பரவலை தடுக்கும் வகையில் வருகிற 15-ந் தேதி வரை அனைத்து சமய விழாக்கள், ஊர்வலங்கள், திருவிழாக்கள் நடத்த தடை உள்ளது. பொது இடங்களில் உறியடி உள்ளிட்ட விளையாட்டுகளை நடத்தவும் அனுமதியில்லை.
விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக பொது இடங்களில் சிலைகளை நிறுவ அல்லது பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அதுபோல் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்செல்வதற்கும், நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பதற்கும் அனுமதி இல்லை. விழாவை பொதுமக்கள் தங்கள் வீட்டிலேயே கொண்டாட வேண்டும்.
வீட்டில் சிலை வைக்கலாம்
விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக தனி நபர்கள் தங்களது வீட்டில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனி நபர்களாக சென்று அருகில் உள்ள நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பதற்கும் அனுமதிக்கப்படுகிறது. இந்த அனுமதி தனிநபர்களுக்கு மட்டுமே பொருந்தும். அமைப்புகள் இந்த செயல்பாடுகளில் ஈடுபடுவது முழுவதுமாக தடை செய்யப்படுகிறது.
தனிநபர்கள் தங்களது வீட்டில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட சிலைகளை கோவில்களின் வெளிப்புறத்திலோ, சுற்றுப்புறத்திலோ வைத்து செல்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த சிலைகளை பின்னர் முறையாக அகற்றுவதற்கு இந்து சமய அறநிலையத்துறையால் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போது நடைமுறையில் உள்ள சமூக இடைவெளியை கடைபிடித்தல் மற்றும் மற்ற கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு மேற்குறிப்பிட்டுள்ள அனுமதி வழங்கப்படும். இந்த அனுமதி தனிநபர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால் இந்த வழிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
முககவசம் கட்டாயம்
விழாவுக்கான பொருட்கள் வாங்க கடைகள் மற்றும் சந்தைகளுக்கு செல்லும் பொதுமக்கள் தவறாமல் முககவசம் அணிவதோடு, அந்த இடங்களில் பொருட்கள் வாங்க நிற்கும்போது சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். கிறிஸ்தவ சமயத்தாரால் கொண்டாடப்பட உள்ள மரியன்னையின் பிறந்தநாள் விழாவின்போது பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது.
கொரோனா தொற்று மேலும் பரவாமல் இருக்க மேற்கண்ட கட்டுப்பாடுகள், வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றுவதை உறுதி செய்து சார்நிலை அலுவலர்களுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், தாராபுரம் சப்-கலெக்டர் ஆனந்த்மோகன், மாவட்ட வருவாய் அதிகாரி சரவணமூர்த்தி, திருப்பூர் மாநகர துணை கமிஷனர் அரவிந்த், ஆர்.டி.ஓ.க்கள் ஜெகநாதன் (திருப்பூர்), கீதா (உடுமலை), கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சாகுல் அமீது உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story