நீர்வரத்து பாதையில் கட்டப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்


நீர்வரத்து பாதையில் கட்டப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 4 Sep 2021 3:58 PM GMT (Updated: 2021-09-04T21:28:35+05:30)

வேலூர் வள்ளலாரில் மலையில் இருந்து வரும் தண்ணீர் செல்லும் பாதையில் கட்டப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள் பொக்லைன் எந்திரம் மூலம் வருவாய்த்துறையினர் இடித்து அகற்றினர்.

வேலூர்

வேலூர் வள்ளலாரில் மலையில் இருந்து வரும் தண்ணீர் செல்லும் பாதையில் கட்டப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள் பொக்லைன் எந்திரம் மூலம் வருவாய்த்துறையினர் இடித்து அகற்றினர்.

நீர்வரத்து பாதை ஆக்கிரமிப்பு

வேலூர் வள்ளலார் எஸ்.டைப் பகுதியில் மலையில் இருந்து நீர்வரும் பாதையை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அதனால் மலையில் இருந்து வரும் தண்ணீர் கால்வாய்க்கு செல்லாமல் குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் சூழ்நிலை காணப்படுகிறது. 

எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கலெக்டர் குமாரவேல்பாண்டியனிடம் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து கலெக்டர் உத்தரவின்பேரில் வேலூர் உதவி கலெக்டர் வெங்கட்ரமணன் (பொறுப்பு) தலைமையில் மாநகராட்சி உதவி கமிஷனர் மதிவாணன், வேலூர் தாசில்தார் செந்தில், சத்துவாச்சாரி போலீசார், வனத்துறையினர் வள்ளலார் பகுதியில் ஆய்வு செய்தனர். 

அப்போது வள்ளலார் மலையில் இருந்து தண்ணீர் வரும் நீர்வரத்து பாதையை ஆக்கிரமித்தும், அரசின் புறம்போக்கு இடத்தில் வீடுகள் கட்டப்பட்டிருந்தன.

வீட்டின் சுற்றுச்சுவர் அகற்றம்

அதிகாரிகள் வருவதை அறிந்ததால் ஆக்கிரமிப்பு வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்தன. அதையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் வீட்டின் சுற்றுச்சுவர் மற்றும் வீடு கட்டுவதற்காக அமைக்கப்பட்டிருந்த அடித்தளம் அகற்றப்பட்டிருந்தது. 

அதேபோல் வீட்டின் சுற்றுச்சுவர் கட்டுவதற்காக எழுப்பப்பட்டிருந்த தூண்களும் இடித்து அகற்றப்பட்டன.

இதுகுறித்து உதவி கலெக்டர் கூறுகையில், நீர்நிலை பகுதிகளில் கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்றும்படி கோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது. அதன்பேரில் வேலூர் மாவட்டத்தில் நீர்நிலை பகுதிகளில் கட்டப்பட்டுள்ள வீடுகள் கணக்கெடுத்து நடவடிக்கை எடுக்கப்படும். 

வள்ளலார் மலையில் இருந்து வரும் நீர்வரத்து பாதையை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு வீடுகள் பூட்டப்பட்டுள்ளதால் அவர்களுக்கு நோட்டீஸ் வழங்க உள்ளோம். வீட்டில் உள்ள பொருட்களை தாங்களாகவே அகற்றி கொள்ள அறிவுறுத்தப்படும். 

அந்த வீடுகளுக்கு குடிநீர் குழாய், மின் இணைப்பு வசதி செய்து கொடுத்தது எப்படி என்று சம்பந்தப்பட்ட துறையினருக்கு நோட்டீஸ் வழங்கப்படும். நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் குறித்து கலெக்டர், உதவிகலெக்டர், தாசில்தார், கிராமநிர்வாக அலுவலர்களிடம் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவித்தார்.


Next Story