பொன்னை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


பொன்னை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x
தினத்தந்தி 4 Sept 2021 9:42 PM IST (Updated: 4 Sept 2021 9:42 PM IST)
t-max-icont-min-icon

பொன்னை ஆற்றங்கரையோர மக்களுக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வேலூர்

பொன்னை ஆற்றங்கரையோர மக்களுக்கு  வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா கீரைசாத்து கிராமத்தில் பொன்னை அணை கட்டப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் பொன்னை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 

அதனால் பொன்னை அணை நிரம்பி வினாடிக்கு 4,300 கனஅடி உபரிநீரானது கிழக்கு மற்றும் மேற்குப்புற கால்வாய்கள் மற்றும் பொன்னையாற்றின் வழியாக செல்கிறது.

மேற்குப்புற கால்வாய் காட்பாடி தாலுகாவில் உள்ள கொண்டமநாயுடுபாளையம், மாதாண்டகுப்பம், பொன்னை, மேலப்பாடி, வெப்பாலை, ஸ்ரீபாதநல்லூர், தேன்பள்ளி, வள்ளிமலை, இளையநல்லூர், கொடுக்கந்தாங்கல், குகையநல்லூர், திருவலம், கார்ணாம்பட்டு, ஏரந்தாங்கல் ஆகிய கிராமங்களின் வழியே சென்று திருவலம் கிராமத்தில் உள்ள பாலாற்றில் கலக்கிறது. 

எனவே பொன்னை மேற்குப்புற கால்வாய் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் மேடான பகுதிகளுக்கு செல்ல வேண்டும். 

மேலும் கால்வாயில் எந்தநேரமும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் கால்வாயில் குளிப்பது, துணிகள் துவைப்பது போன்ற செயல்களில் பொதுமக்கள் ஈடுபட வேண்டாம். கால்வாயில் சிறுவர்களை குளிக்கவோ, செல்போன் மூலம் செல்பி எடுத்து கொள்ளவோ, விளையாடவோ பெற்றோர்கள் அனுமதிக்க கூடாது.

இந்த தகவலை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Next Story