கல்லூரி மாணவியின் திருமண நிச்சயதார்த்தத்தை நிறுத்திய காதலனின் கழுத்து அறுப்பு
அந்தரங்க வீடியோவை வாட்ஸ்-அப் மூலம் மணமகனுக்கு அனுப்பி, கல்லூரி மாணவியின் திருமண நிச்சயதார்த்தத்தை நிறுத்திய காதலனின் கழுத்து அறுக்கப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேடசந்தூர்:
கல்லூரி மாணவியுடன் காதல்
சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா நரசிங்காபுரத்தை சேர்ந்தவர் மேகநாதன் (வயது 27). இவர் சேலத்தில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கும், வேடசந்தூர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு கடந்த 1½ ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
23 வயதான அந்த மாணவி, கொடைக்கானலில் உள்ள கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்தார். இதனால் அவரை பார்ப்பதற்காக மேகநாதன் அடிக்கடி கொடைக்கானல் செல்வது வழக்கம்.
அப்போது அவர்கள் நெருக்கமாக இருப்பதை போல புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனர். கரும்பாய் இனித்த காதல், ஒரு கட்டத்தில் பாகற்காய் போல கசக்க ஆரம்பித்தது. இதனால் கல்லூரி மாணவி, தனது காதலனிடம் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக விலக முயன்றார்.
திருமண நிச்சயதார்த்தம் நிறுத்தம்
இதனிடையே மாணவியின் பெற்றோர், அவருக்கு திருமணம் செய்து வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். இதற்காக மாப்பிள்ளையும் பார்த்து விட்டனர். கல்லூரி மாணவிக்கு விரைவில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்தது.
இதனை அறிந்த காதலன் மேகநாதன் ஆத்திரம் அடைந்தார். மேலும் கல்லூரி மாணவியின் திருமணத்தை நிறுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டார். இதற்கு காதலிக்கும்போது 2 பேரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகடைக்காயாக பயன்படுத்த திட்டமிட்டார்.
அதாவது, கல்லூரி மாணவியுடன் நிச்சயதார்த்தம் செய்ய இருந்த மணமகனின் செல்போன் எண்ணை எப்படியோ மேகநாதன் வாங்கி விட்டார். பின்னர் அந்த செல்போன் எண்ணுக்கு, கல்லூரி மாணவியுடன் நெருக்கமாக இருந்தபோது எடுத்த அந்தரங்க வீடியோவை வாட்ஸ்-அப் மூலம் அனுப்பி வைத்தார்.
ேமலும் அதனை இன்ஸ்டாகிராமிலும் பதிவு செய்தார். வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணமகன் நிச்சயதார்த்தத்தை உடனடியாக நிறுத்தி விட்டார். இதனால் கல்லூரி மாணவியின் குடும்பத்தினர் மனவேதனை அடைந்தனர்.
போலீசார் எச்சரிக்கை
இதுகுறித்து வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மேகநாதன் மீது கல்லூரி மாணவி தரப்பில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இருப்பினும் மேகநாதன் கல்லூரி மாணவியை செல்போனில் தொடர்பு கொண்டு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்தார். நிச்சயதார்த்தம் நின்று போன அவமானம் ஒரு புறம் இருக்க, தொடர்ந்து தொல்லை கொடுக்கும் மேகநாதனால் கல்லூரி மாணவியின் குடும்பத்தினர் கடும் ஆத்திரத்தில் இருந்தனர்.
எனவே நைசாக பேசி, தங்களது கிராமத்துக்கு மேகநாதனை வரவழைத்து நைய்ய புடைப்பதற்கு கல்லூரி மாணவியின் குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதன்படி தனது குடும்பத்தினரின் ஆலோசனையின் பேரில் மேகநாதனிடம், கல்லூரி மாணவி செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
தர்ம அடி
அப்போது, வேடசந்தூர் பகுதியில் உள்ள தனது கிராமத்துக்கு வந்து தன்னை அழைத்து சென்று திருமணம் செய்து கொள்ளுமாறு கல்லூரி மாணவி நைசாக பேசினார். காதலியின் எதிர்பாராத அழைப்பு, மேகநாதனை மகிழ்ச்சியின் உச்சத்துக்கே கொண்டு சென்றது.
தன்னை நைய்ய புடைப் பதற்கே காதலி அழைக் கிறார் என்பதை அறியாத மேகநாதன் உற்சாகம் அடைந்தார். இதனால் சேலத்தில் இருந்து பல்வேறு கனவுகளுடன் காரில் புறப்பட்டார்.
காரை டிரைவர் ஓட்ட, மேகநாதன் முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்தார். நேற்று முன்தினம் அதிகாலை 4 மணி அளவில் கல்லூரி மாணவியின் கிராமத்தை கார் வந்தடைந்தது.
அவரை எதிர்பார்த்து காத்திருந்த கல்லூரி மாணவியின் குடும்பத்தினர் திடீரென மேகநாதன் மீது பாய்ந்து உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கினர். மேலும் தர்ம அடி கொடுத்தனர்.
கழுத்து அறுப்பு
மேகநாதனுக்கு விழுந்த அடியை பார்த்த டிரைவர், காரை நிறுத்தி விட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்து விட்டார்.
தீராத ஆத்திரத்தில் இருந்த கல்லூரி மாணவியின் உறவினர் ஒருவர், தான் வைத்திருந்த கத்தியால் மேகநாதனின் கழுத்தை ஆட்டை அறுப்பதை போல அறுத்தார். இதில் ரத்தம் பீறிட்டது.
ஒரு கட்டத்தில், வலி தாங்க முடியாமல் மேகநாதன் அலறினார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். இதனையடுத்து, கல்லூரி மாணவியின் உறவினர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த மேகநாதனை அக்கம்பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
2 பேர் ைகது
இதுகுறித்து எரியோடு போலீஸ் நிலையத்தில் மேகநாதன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜகணேஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவியின் குடும்பத்தினரை வலைவீசி தேடி வந்தனர்.
இதில் கல்லூரி மாணவியின் உறவினர்கள் குணசீலன் (21), காளிதாஸ் (36) ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான கல்லூரி மாணவி உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் வேடசந்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story