மனைவி, கைக்குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து ஆம்புலன்ஸ் டிரைவர் தற்கொலை முயற்சி


மனைவி, கைக்குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து ஆம்புலன்ஸ் டிரைவர் தற்கொலை முயற்சி
x

கன்னிவாடி அருகே மனைவி, கைக்குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து ஆம்புலன்ஸ் டிரைவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கன்னிவாடி:

108 ஆம்புலன்ஸ் டிரைவர்

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள கரிசல்பட்டியை சேர்ந்தவர் மரிய செபஸ்தியார் (வயது 27). இவர் கோவையில் 108 ஆம்புலன்சில் டிரைவராக வேலை செய்து வந்தார். 

சமீபத்தில் அவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனம் உடைந்து காணப்பட்டார். ேமலும் தனது குடும்பத்தினருடன் அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். 

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மரியசெபஸ்தியார் குடிபோதையில் வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அரளிவிதையை அரைத்து, தனது மனைவி பிரிசில்லா லூயிஸ் (23)-க்கு கொடுத்தார். 

 4 பேருக்கு சிகிச்சை

முதலில் மறுத்த பிரிசில்லா லூயிஸ், மரியசெபஸ்தியாரின் வற்புறுத்தலால் விஷத்தை வாங்கி குடித்து விட்டார். இதேபோல் பச்சிளங்குழந்தை என்று கூட பாராமல் தனது மகள்களான வெர்ஜின் மேரி (2), கியூரா (8 மாதம்) ஆகியோருக்கும் அரளி விதையை அரைத்து மரியசெபஸ்தியார் கொடுத்தார்.

மனைவி மற்றும் கைக்குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த மரிய செபஸ்தியாரும் அரளி விதையை அரைத்து குடித்து விட்டார். 

இதனைக்கண்ட மரியசெபஸ்தியாரின் தந்தை ஆரோக்கியம் தடுக்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த மரிய செபஸ்தியார், அவரை உருட்டுக்கட்டையால் தாக்கி காயப்படுத்தினார்.

இதற்கிடையே விஷம் குடித்த 4 பேரும் மயக்கம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

 பரபரப்பு
இதேபோல் தாக்குதலில் காயம் அடைந்த ஆரோக்கியத்துக்கு கன்னிவாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து கன்னிவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராசு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மனைவி, கைக்குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து ஆம்புலன்ஸ் டிரைவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கன்னிவாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story