மோர்தானா அணை வேகமாக நிரம்பி வருகிறது
வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் வருவதால் மோர்தானா அணை வேகமாக நிரம்பி வருகிறது.
குடியாத்தம்
வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் வருவதால் மோர்தானா அணை வேகமாக நிரம்பி வருகிறது.
மோர்தானா அணை
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் ஆந்திர மாநில எல்லையை ஒட்டியபடி தமிழக பகுதியில் மோர்தானாஅணை உள்ளது. இந்த அணை 11.5 மீட்டர் உயரம் கொண்டது. 261 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கி வைக்கும் கொள்ளளவு கொண்டது.
மோர்தானா அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
மேலும் மோர்தானா அணைக்கு நீராதாரமாக உள்ள பகுதிகளில் உள்ள ஏரிகள் சிறு, சிறு தடுப்பணைகள், முக்கியமாக காலவபல்லி அணை உள்ளிட்டவை நிரம்பியுள்ளதாலும், மேலும் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான பலமநேர், புங்கனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருவதாலும் அணைக்கு இன்று மாலை நிலவரப்படி வினாடிக்கு சுமார் 250 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.
நிரம்பி வருகிறது
அணையின் உயரம் சுமார் 9 மீட்டர் எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 3 நாட்களில் அணையின் நீர்மட்டம் 7 அடி உயர்ந்துள்ளது.
அணையின் நீர் இருப்பு சுமார் 190 மில்லியன் கன அடியை தாண்டி உள்ளதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து மழை பெய்து வந்தால், தண்ணீர் வரத்து அதிகரித்து சில தினங்களில் மோர்தானா அணை நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மோர்தானா அணை நிரம்பி வருவதாக விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ந் தேதி மோர்தானா அணை நிரம்பியது, சுமார் 8 மாத காலம் மோர்தானா அணை நிரம்பிய நிலையில் இருந்தது. பின்னர் கடந்த ஜூன் மாதம் அணையிலிருந்து விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு
இந்த நிலையில் மோர்தானா அணையை நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இரவு நேரங்களில் அதிகளவு தண்ணீர் வரும் வாய்ப்பு உள்ளதால் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
மோர்தானா அணை நிரம்பி வருவதை அறிந்த குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வாகனங்களில் நேற்று முதலே வரத் தொடங்கியுள்ளனர்.
பொதுமக்களை தடுக்கும் வகையில் கடந்த ஆண்டை போல் சைனகுண்டா- மோர்தானா கூட்ரோடு பகுதியில் காவல்துறையினர் சோதனைச்சாவடி அமைக்க வேண்டும். உள்ளூர் பொதுமக்கள் தவிர தேவையின்றி வெளியூர் நபர்கள் மோர்தானா அணை செல்வதை தடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story