ரேஷன்கடை பணியாளர்கள் இன்முகத்துடன் பணியாற்ற வேண்டும்


ரேஷன்கடை பணியாளர்கள் இன்முகத்துடன் பணியாற்ற வேண்டும்
x
தினத்தந்தி 4 Sept 2021 10:34 PM IST (Updated: 4 Sept 2021 10:34 PM IST)
t-max-icont-min-icon

ரேஷன்கடை ஊழியர்கள் இன்முகத்துடன் பணியாற்ற வேண்டும் என்று மண்டல இணைப்பதிவாளர் காந்திநாதன் அறிவுறுத்தினார்.

திண்டுக்கல்:

தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் மூலம் ரேஷன்கடை பணியாளர்களுக்கு ஒருநாள் புத்தாக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் 1,016 ரேஷன்கடைகளில் பணியாற்றும் 625 ஊழியர்களுக்கு 3 கட்டங்களாக பயிற்சி அளிக்கப்படுகிறது. அதில் முதல்கட்டமாக 225 பணியாளர்களுக்கான புத்தாக்க பயிற்சி, திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. திண்டுக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வர் எஸ்.கிருஷ்ணகுமார் வரவேற்றார்.

 திண்டுக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜி.காந்திநாதன் தலைமை தாங்கி, பயிற்சி கையேட்டை வெளியிட்டார். பின்னர் அவர் பேசுகையில், ரேஷன்கடை பணியாளர்கள், மனஅழுத்தம் இல்லாமல் இன்முகத்துடன் பணியாற்ற வேண்டும். பொதுமக்களுக்கு சேவை செய்யும் துறை என்பதை மனதில் கொள்ள வேண்டும். பொதுமக்களை சிறப்பாக அணுகி, பொருட்களை வழங்கினால் அரசுக்கு நல்ல பெயர் கிடைக்கும், என்றார்.

மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனரும், இணைப்பதிவாளருமான ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்து பேசுகையில்,. உணவு பொருட்கள் வினியோகம், இருப்பு சரிபார்ப்பு உள்பட பல பணிகள் இருந்தாலும் முகத்தில் புன்னகையை எப்போதும் வைத்திருங்கள். அது உங்களை நன்றாக செயல்பட வைக்கும், என்றார்.

இதில் மாவட்ட வழங்கல் அலுவலர் பழனிக்குமார், பொதுவினியோக திட்ட துணை பதிவாளர் திருமாவளவன், பறக்கும்படை தாசில்தார் அபுரிஸ்வான், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண்மை இயக்குனர் செல்வக்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மேலும் பொதுவினியோக திட்டத்தின் திண்டுக்கல் நகர சார் பதிவாளர் சிவசுப்பிரமணி, கண்காணிப்பாளர் மற்றும் சார்பதிவாளர் ராஜாங்கம், ஊரக சார் பதிவாளர் ரத்னாதேவி, வடமதுரை கள அலுவலரும், சார் பதிவாளருமான அந்தோணிராஜா, பி.ஓ.எஸ். மாவட்ட மேலாளர் கருப்புசாமி பாண்டியன் ஆகியோர் ரேஷன்கடை பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
--------

Next Story