காட்டுப்பன்றிகளால் விவசாயம் பாதிப்பு


காட்டுப்பன்றிகளால் விவசாயம் பாதிப்பு
x
தினத்தந்தி 4 Sep 2021 5:11 PM GMT (Updated: 4 Sep 2021 5:11 PM GMT)

மடப்புரம் ஊராட்சி பகுதியில் காட்டுப்பன்றிகளால் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது.

திருப்புவனம், 
மடப்புரம் ஊராட்சி பகுதியில் காட்டுப்பன்றிகளால் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது.
விதைப்பு
திருப்புவனம் யூனியனை சேர்ந்தது மடப்புரம் ஊராட்சி. இந்த ஊராட்சி பகுதியில் உள்ளது கழுங்குப்பட்டி கிராமம். இந்த பகுதியில் நெல் விவசாயம் அதிகமாக நடைபெறும். தற்போது நெல் விவசாயம் செய்ய ஆடிப்பட்டத்தில் விதைப்பு செய்துள்ளனர். 
விதைப்புகள் முளைத்து வரும் சமயத்தில் காட்டுப்பன்றிகள் இரவு நேரத்தில் வயல்களில் இறங்கி முளைப்புக்களை சேதப்படுத்தி வருகின்றன. சிலர் கேப்பை, கம்பு விவசாயம் செய்துள்ளனர். காட்டுப்பன்றிகளால் அந்த விவசாயமும் சேதமடைந்து வருகிறது. காட்டுப்பன்றிகள் இரவு முழுவதும் பயிர்களுக்கு சேதம் ஏற்படுத்திவிட்டு கழுங்குப்பட்டி ஓடை பகுதியில் உள்ள கருவேல காட்டிற்குள் தங்கி கொள்கிறது. காட்டுப்பன்றிகள் பகலில் வெளியே வருவதே இல்லை. இரவு மட்டும் தான் வெளிவந்து பயிர்களை நாசம் செய்கின்றன. மேலும் இந்த பகுதியில் கரும்பு விவசாயம் செய்து பல வருடங்கள் ஆகிவிட்டது. 
கோரிக்கை
இந்தப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையாலும் வைகை ஆற்றில் தொடர்ந்து வந்த தண்ணீராலும் கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் சில விவசாயிகள் கரும்பு விவசாயம் செய்து வருகின்றனர். காட்டு பன்றிகள் கரும்புகளை சேதப்படுத்தி வருகிறது. 
தங்கள் விவசாய பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் இரவு முழுவதும் வயல் காட்டிற்குள் பன்றிகளை விரட்டும் நிலை உள்ளது. ஒரு சில நேரங்களில் காட்டுப்பன்றிகள் கூட்டமாக வரும்போது விவசாயிகள் மிரளும் சூழ்நிலை வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் காட்டுப்பன்றிகளை விரட்ட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story