மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கித்தருவதாக கூறி ரூ.43 லட்சத்தை மோசடி செய்த தனியார் மருத்துவமனை டாக்டர் கைது
மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கித்தருவதாக கூறி ரூ.43 லட்சத்தை மோசடி செய்த தனியார் மருத்துவமனை டாக்டர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம்,
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் துக்காராம். இவர் தனது மகனுக்கு எம்.பி.பி.எஸ். மருத்துவ சீட்டு வாங்கி தரும்படி தனது நண்பர்கள் சிலரிடம் கேட்டுள்ளார்.
இதையறிந்த விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த உப்புவேலூரை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் துக்காராமை அணுகி, தான் அகில இந்திய மருத்துவ கவுன்சில் இயக்குனராக இருப்பதாகவும் உங்கள் மகனுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கி தருவதாகவும், அதற்கு பணம் செலவாகும் என்றும் கூறியுள்ளார்.
இதை நம்பிய துக்காராமிடமிருந்து கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் முதல் ஆகஸ்டு மாதம் வரை பல தவணைகளாக ரூ.85 லட்சத்தை பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார். அதற்கு 6.7.2017 தேதியிட்ட அகில இந்திய மருத்துவ கவுன்சில் வழங்கியதுபோன்ற ஒரு நுழைவுச்சீட்டை கொடுத்துள்ளார்.
அந்த நுழைவுச்சீட்டை பயன்படுத்தி துக்காராமின் மகன், சம்பந்தப்பட்ட மருத்துவ கல்லூரிக்கு சென்று கேட்டபோது அந்த நுழைவுச்சீட்டு போலியானது என தெரியவந்தது.
பணம் மோசடி
இதனால் அதிர்ச்சியடைந்த துக்காராம், கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் பன்னீர்செல்வத்தை தொடர்பு கொண்டு தான் கொடுத்த பணத்தை திருப்பித்தரும்படி கேட்டுள்ளார். அதற்கு அவர், தங்கள் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராக உள்ளவர் தனது உறவினர் என்றும், ஆதலால் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி துக்காராமை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.
அதன் பிறகு துக்காராம், பன்னீர்செல்வத்தின் வீட்டிற்கு நேரில் சென்று கேட்டதற்கு, இந்த பணம் பரங்கனியில் திருமண மண்டபம் கட்டுவதற்கு வாங்கியதாக இருக்கட்டும் என்று கூறி முத்திரைத்தாளில் ரூ.85 லட்சத்திற்கு பன்னீர்செல்வமும், அவரது மகன் டாக்டர் ஸ்ரீநிவாஷ் ஆகியோர் எழுதிக்கொடுத்தனர்.
மேலும் சிறிது, சிறிதாக ரூ.42 லட்சத்தை மட்டும் துக்காராமின் வங்கி கணக்கில் அவர்கள் செலுத்தியுள்ளனர். மீதமுள்ள ரூ.43 லட்சத்தை கொடுக்காமல் பன்னீர்செல்வம், அவரது மகன் டாக்டர் ஸ்ரீநிவாஷ் ஆகியோர் மோசடி செய்துவிட்டனர்.
டாக்டர் கைது
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவிடம் துக்காராம் புகார் மனு கொடுத்தார். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி பன்னீர்செல்வம், அவரது மகன் ஸ்ரீநிவாஷ் ஆகியோர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர்.
இந்நிலையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் இருதயராஜ், ரவீந்திரன் ஆகியோர் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், பெங்களூர் சாந்திவானா சாகாநகர் பகுதிக்கு விரைந்து சென்று அங்கிருந்த ஸ்ரீநிவாசை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
பின்னர் அவரை போலீசார், வானூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி விழுப்புரம் வேடம்பட்டில் உள்ள மத்திய சிறையில் அடைத்தனர். கைதான ஸ்ரீநிவாஷ் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story