பழனி அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி பிணத்துடன் உறவினர்கள் மறியல் 3 கி.மீ. தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் பரபரப்பு


பழனி அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி பிணத்துடன் உறவினர்கள் மறியல் 3 கி.மீ. தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 4 Sep 2021 5:44 PM GMT (Updated: 4 Sep 2021 5:44 PM GMT)

பழனி அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியானார். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிணத்துடன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 3 கி.மீ. தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பழனி :
பழனி அருகே உள்ள கணக்கன்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 55). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2-ந்தேதி இரவு கணக்கன்பட்டி பஸ்நிறுத்த பகுதியில் பழனி-திண்டுக்கல் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பழனிசாமி பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சாலை மறியல்
இதைத்தொடர்ந்து அவரது உடலை அடக்கம் செய்வதற்கான வேலைகள் நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் பழனிசாமியின் உறவினர்கள் திடீரென அவரது உடலை கணக்கன்பட்டியில் உள்ள பழனி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், பழனிசாமி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்கு காரணமானவர்கள் மீது வழக்குப்பதிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பழனிசாமியின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதுகுறித்து தகவலறிந்த ஆயக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கையை நிறைவேற்றும் வரை பிணத்தை எடுக்க மாட்டோம் என்று கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஒட்டன்சத்திரம் போலீஸ் துணை சூப்பிரண்டு சோமசுந்தரம் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
போக்குவரத்து பாதிப்பு
அப்போது விபத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து உறவினர்கள் பிணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். சுமார் 1½ மணி நேரம் நடந்த இந்த மறியலால் திண்டுக்கல்-பழனி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு 3 கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். மேலும் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மறியல் கைவிடப்பட்டதை தொடர்ந்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

Next Story