தபால் நிலைய ஊழியரின் தோட்டத்தில் ரூ.15 லட்சம் சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்-மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
எஸ்.வாழவந்தி அருகே தபால் நிலைய ஊழியரின் தோட்டத்தில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள 27 சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டன. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பரமத்திவேலூர்:
சந்தன மரங்கள்
நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா எஸ்.வாழவந்தி அருகே உள்ள கே.ராசாம்பாளையத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது 40). இவர் கே.புதுப்பாளையத்தில் உள்ள தபால் நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ரேவதி (37). இவர்களுக்கு சொந்தமான 90 சென்ட் தோட்டம் கே.ராசாம்பாளையத்தை அடுத்த சூரியன்பாறை பகுதியில் உள்ளது. அதில் அவர்கள் கடந்த 16 ஆண்டுகளாக 97 சந்தன மரங்களை நட்டு வளர்த்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்று மாலை தர்மலிங்கத்தின் தாய் ராசம்மாள் அந்த தோட்டத்துக்கு சென்றார். அப்போது அங்கு 27 சந்தன மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் சில சந்தன மரங்களில் அதை அறுத்ததற்கான அடையாளம் இருந்தது.
ரூ.15 லட்சம்
இதுகுறித்து உடனடியாக அவர் பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அந்த பகுதி ஆட்கள் நடமாட்டம் குறைவாக உள்ள பகுதி என்பதால் மர்ம நபர்கள் சந்தன மரங்களை வெட்டி கடத்தி சென்றது தெரியவந்தது. வெட்டி கடத்தப்பட்ட மரங்களின் மதிப்பு சுமார் ரூ.15 லட்சம் என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தன மரங்களை வெட்டி கடத்திய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து நாமக்கல் வனத்துறையினரும் விசாரித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story