தாசில்தாரை தாக்கிய தி.மு.க.பிரமுகர் கைது


தாசில்தாரை தாக்கிய தி.மு.க.பிரமுகர் கைது
x
தினத்தந்தி 5 Sept 2021 1:04 AM IST (Updated: 5 Sept 2021 1:04 AM IST)
t-max-icont-min-icon

மணப்பாறையில் தாசில்தாரை தாக்கிய தி.மு.க.பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

மணப்பாறை, செப்.5-
மணப்பாறையில் தாசில்தாரை தாக்கிய தி.மு.க.பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
தாசில்தார் மீது தாக்குதல்
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் நகர நிலவரி திட்ட அலுவலகம் உள்ளது. இங்கு தனி தாசில்தாராக பாத்திமா சகாயராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் காலை எடத்தெரு பகுதியை சேர்ந்த தி.மு.க. நகர பொருளாளர் கோபி என்பவர் நிலவரி திட்ட அலுவலகத்திற்கு வந்தார்.
அப்போது, பணியில் இருந்த தாசில்தார் பாத்திமா சகாயராஜியிடம்  சர்வே எண் ஒன்றை கொடுத்து அது யார் பெயரில் உள்ளது என்று கேட்டதாக தெரிகிறது.  இதற்கு தாசில்தார் பதில் அளித்துள்ளார். மேலும் மற்றொரு சர்வே எண் தொடர்பாக கேட்டபோது அதற்கு உரிய ஆவணத்தை தாசில்தார் கேட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.  ஒருகட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகி்றது. இதில் காயம் அடைந்ததாக கூறி தாசில்தார் பாத்திமா சகாயராஜ், கோபி ஆகியோர் மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தி.மு.க. பிரமுகர் கைது
இதையடுத்து கோபி அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதற்கிடையில் நிலஅளவை ஆய்வாளர் குணசேகரன் சம்பவம் தொடர்பாக மணப்பாறை போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் கோபி மீது அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் மருத்துவமனையில் இருந்த கோபியிடம் நீதிபதி நேரில் சென்று விசாரணை நடத்தினார். இதனையடுத்து அவரை கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி நேற்று மாலையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட கோபியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) மணி தலைமையிலான போலீசார் கைது செய்தனர். பின்னர் கோபி  துறையூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story