என்.எல்.சி. தொழிலாளி உள்பட 3 பேர் சாவு


என்.எல்.சி. தொழிலாளி உள்பட 3 பேர் சாவு
x
தினத்தந்தி 4 Sep 2021 8:22 PM GMT (Updated: 2021-09-05T01:52:27+05:30)

தனித்தனி விபத்தில் என்.எல்.சி. தொழிலாளி உள்பட 3 பேர் பலியானாா்கள்.

மந்தாரக்குப்பம், 

மந்தாரக்குப்பம் அடுத்த குறவன்குப்பத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் கருணாமூர்த்தி(வயது 40). என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளி. இவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் வடலூர் சென்று விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். மந்தாரக்குப்பம் அடுத்த காமராஜர் நகர் அருகில் வந்து கொண்டிருந்தபோது, திருச்சியில் இருந்து கடலூர் நோக்கி வந்த அரசு பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக கருணாமூர்த்தி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கருணாமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். 
மந்தாரக்குப்பம் அடுத்த குறவன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் ஆனந்த்(32). சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் செங்கால் பாளையம் சென்று விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். செங்கால்பாளையம் பஸ்நிறுத்தம் அருகே வந்தபோது, ஆனந்த் மோட்டார் சைக்கிளும், எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இதில் பலத்த காயமடைந்த ஆனந்த் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஆனந்த் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த தனித்தனி புகாரின்பேரில் மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
விழுப்புரம் மாவட்டம் டி.குமாரமங்கலத்தை சேர்ந்தவர் சடையப்பன் மகன் செல்வராஜ்(50). தொழிலாளியான இவர், தனது உறவினரான ராஜாமணியுடன்(60) குள்ளஞ்சாவடி அருகே உள்ள சுப்பிரமணியபுரம் கிராமத்தில் நடந்து சென்றார். அப்போது வடலூரில் இருந்து கடலூர் நோக்கி வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே செல்வராஜ் பலியானர். படுகாயமடைந்த ராஜாமணிக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story